Published : 19 Mar 2024 12:07 PM
Last Updated : 19 Mar 2024 12:07 PM
புதுடெல்லி: மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ்சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளதாக விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத்துறை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அமலாக்கத்துறையை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: "அமலாக்கத்துறை அப்பட்டமான பொய் மற்றும் அற்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமலாக்கத்துறை ஒரு நடுநிலையான அமைப்பாக இருப்பதுக்கு பதிலாக பாஜகவின் அரசியல் பிரிவாக செயல்படுவதையே காட்டுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த பொய்யை விதைத்து, பரபரப்பை ஏற்படுத்தும் அவநம்பிக்கையான முயற்சியாகும்.
சுமார் 500க்கும் அதிகமான ரெய்டுகளை நடத்தி, ஆயிரக்கணக்கான சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பின்னரும் இதுவரை இந்த வழக்கில் ஒரு ரூபாயோ அல்லது ஆதாரமோ கைப்பற்றப்படாத விரக்தியை பற்றி அவர்கள் இப்போது பேசுகிறார்கள்.
இந்த விவாகாரத்தில் ரூ.100 கோடி பணபரிவார்த்தனை நடந்திருப்பதாக கூறப்படும் கூற்றை உச்சநீதிமன்றமே நிராகரித்திருக்கிறது. இந்த ஒட்டுமொத்த மதுபான ஊழல் வழக்கும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை உலகமே தற்போது தெரிந்து கொண்டு இருக்கிறது.
மணீஷ் சிசோடியா உட்பட பல ஆம் ஆம்மி கட்சி தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது, என்றாலும் இதுவரை ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நிதி வழங்கிய அனைத்து நிறுவனங்களும் முன்பு அமலாக்கத்துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு என்ன அர்த்தமென்றால், பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிறுவனங்கள், சோதனைக்கு பின்னர் அவர்களுடைய குற்றத்தின் வருமானத்தை பாஜகவுக்கு மாற்றியுள்ளன.
இந்த விவாகரத்தில் பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்பட்டால் ஆயிரம் வழக்குகள் போட முடியும். இதில் மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு உள்ளான நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் பின்னர் பாஜகவுக்கு தேர்தல் நிதியளித்துள்ளன. எனவே, டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றத்தைக் கண்டுபிடிக்க அமலாக்கத்துறை விரும்பினால் அவை பாஜகவின் கணக்குகளில் உள்ளன". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வரும் 23-ம் தேதிவரை அவரை காவலில் எடுத்துள்ள அமலாக்கத் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ்சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டுக் கொண்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.100 கோடி வழங்கி உள்ளார்". என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெல்லி மதுபான ஊழல் வழக்குத் தொடர்பாக டெல்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் விசாரணை அமைப்பு சோதனை நடத்தியது. இந்த வழக்குத் தொடர்பாக, மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT