Published : 19 Mar 2024 10:39 AM
Last Updated : 19 Mar 2024 10:39 AM
பிஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனருமான (ஆர்ஜேடி) லாலு பிரசாத் யாதவின் வாரிசுகள் தேஜஸ்வி யாதவ் உட்பட 3 பேர், ஏற்கெனவே அரசியலில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா மக்களவைத் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாலு பிரசாத் யாதவ், உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது அவரை கவனித்துக் கொண்டவர் ரோஹிணி. மேலும் தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்து தனது பாசத்தைக் காட்டி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றவர்.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள மேலவை உறுப்பினரான (எம்எல்சி) சுனில் குமார் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறும்போது, சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியல் அரங்கில் நுழையத் தயாராக உள்ளார் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் ரோஹிணி ஆச்சார்யா, இதுதொடர்பான செய்திகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை தனது அண்ணனும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை புகழ்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை ரோஹிணி வெளியிட்டார்.
ரோஹிணி ஆச்சார்யா அரசியலுக்கு வந்தால், லாலுவின் நான்காவது அரசியல் வாரிசாக அவர் இருப்பார். தேஜஸ்வி யாதவ் தவிர, தேஜ் பிரதாப் யாதவ், டாக்டர் மிசா பாரதி ஆகியோர் அரசியலில் உள்ளனர். தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் அமைச்சர் ஆவார். மிசா பாரதி மாநிலங்களவை எம்.பி.யாக செயலாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT