Published : 19 Mar 2024 07:26 AM
Last Updated : 19 Mar 2024 07:26 AM
புதுடெல்லி: பாஜக, விஎச்பி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் சபையின் 3 நாள் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
கடந்த 2021-ல் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஆன தத்தாத்ரேயா ஹோசபல் இக்கூட்டத்தில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். வரும் 2027 வரை அவர் இந்தப் பொறுப்பு வகிப்பார். இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட 2023-24-க்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் தற்போதைய முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த ஆண்டு (2023-24) தங்கமான ஆண்டு என்றே நினைவுகூரப்படும். ஏனெனில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேநேரம் இந்தியா, இந்துத்துவா அல்லது சங்க் ஆகிய மூன்றையும் சீர்குலைக்க தேசவிரோத சக்திகள் புதுப்புது சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. எனவே, இதுபோன்ற சதித் திட்டங்களை முறியடிக்க நாட்டு மக்கள் பெரிய அளவில் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாக்பூர் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தத்தாத்ரேயா ஹோசபல் கூறும்போது, “அயோத்தி ராமர் கோயிலுக்காக நடத்தியதை போன்ற போராட்டங்கள் காசி, மதுரா கோயில்களுக்கு தேவையில்லை. அயோத்தியை போன்று அனைத்து பிரச்சினைகளையும் அணுகத் தேவையில்லை.
காசி, மதுரா விவகாரங்கள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அயோத்தியை போன்று நீதிமன்றம் மூலம் பிரச்சினைகள் முடிந்தால் போராட்டத்துக்கான அவசியம் இல்லை. விஎச்பியும், மூத்தத் துறவிகளும் இரு கோயில்களின் இடங்களை மீட்டெடுக்க வலியுறுத்துவது அதிகரித்துள்ளது. இதுபோல், இந்துக்கள் தரப்பில் அதன் அவசியத்தை அவ்வப்போது எடுத்துரைப்பதே போதுமானது” என்றார்.
அயோத்தியில் ராமர் கோயிலை இடித்துவிட்டு அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் நடத்திய கரசேவையில் கடந்த 1992, டிசம்பர் 6-ம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு 2019 நவம்பரில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கிடையில் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் ஆகியவற்றின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்தஇடங்களில் மசூதி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இக்கோயில்களை ஒட்டியுள்ள கியான்வாபி மற்றும் ஷாயிஈத்கா மசூதி இடங்களை ஒப்ப டைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இவற்றுக்காகவும் கரசேவை நடத்த தயார் என இந்து அமைப்புகள் சார்பில் பேச்சுக்கள் கிளம்பின. இந்நிலையில் அத்தகையபோராட்டம் தேவையில்லை என ஆர்எஸ்எஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் குறித்தும் ஹோசபல் கருத்து கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தேர்தல் பத்திரம் என்பது பரீட்சார்த்த முறையில் அறிமுகமானது. அது தொடர்பாக கேள்வி எழும்போது மாற்றங்கள் அவசியம்” என்றார். இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கும் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT