Published : 18 Mar 2024 04:09 PM
Last Updated : 18 Mar 2024 04:09 PM
பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜன சேனாக் கட்சியும் இணைந்ததை அடுத்து சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் நரேந்திர மோடி ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டனர். ஆந்திரப் பிரதேசத்தில் வரவிருக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பிரச்சாரத்தின் தொடக்கப் படி இதுதான்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் சேர்ந்தே நடக்கின்றன. மே 13-ம் தேதி வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ‘மக்களின் குரல்’ என்ற பெயரில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் நேற்று சிலக்காலூரிப்பேட்டையில் நடைபெற்றது. குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு மிகப் பெரிய பொதுக்கூட்டமாகும் இது. நண்பர்களாக இருந்து பிறகு பிரிந்து இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி ஏற்பட்டுள்ளது.
ரூ.371 கோடி திறன் மேம்பாட்டு திட்ட மோசடியில் ஆந்திர சிஐடியால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பரில் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்திய நாயுடு மற்றும் கல்யாண் ஆகியோர் இந்தப் பொதுக் கூட்டத்தில், “முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி ஊழல், திறமையற்ற நிர்வாகம் மலிந்தவை” என்று கடுமையாகச் சாடினர்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (YSRCP) தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது அவ்வளவு காட்டமாக விமர்சிக்கவில்லை. அவரை விடுத்து பொதுவான நிலையில் மோடி விமர்சித்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டியை விடுத்து அவரது அமைச்சரவை சகாக்களை மட்டும் ‘ஊழல் பந்தயத்தில் ஈடுப்பட்டிருப்பதாக’ மோடி சாடினார். மேலும், கோபத்தில் உள்ள ஆந்திர வாக்காளர்கள், தற்போதுள்ள அரசை அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார் மோடி.
தனது பேச்சில் ஒரே இடத்தில் மட்டுமே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. அதாவது, “இங்கே ஜெகனையும் காங்கிரஸையும் தனித்தனி கட்சிகளாகப் பார்க்கும் தவறைச் செய்யாதீர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. அவர்களின் செயல் எங்கள் கூட்டணிக்கு பாதகமாக வாக்குகளை காங்கிரஸுக்கு திசை திருப்பும் சூழ்ச்சியாகும்” என்று ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியபோது ஜெகன் பெயரை உச்சரித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா ஜனவரி மாதம் ஆந்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டதைச் சுட்டியே பிரதமர் மோடி மேற்கண்டவாறு பேசியுள்ளார்.
ஜெகனின் சகோதரியாக இருந்தாலும் ஜெகனின் ஆட்சியை அவர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தி வருகிறார். 2014-ம் ஆண்டு கட்சி உடைப்புக்குப் பிறகு காங்கிரஸ் பெயரளவான இருப்பிற்கு குறுக்கப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி தெலுங்கு அரசியல் ஆளுமைகளான என்.டி. ராமராவையும், பி.வி.நரசிம்மராவையும் அவமதித்ததாக மோடி குற்றம் சாட்டினார்.
“திரையில் ராமர், கிருஷ்ணர் வேடங்களைத் தாங்கியவர் ஆந்திர முதல்வராக ஏழைகளுக்காகப் பாடுபட்ட என்.டி.ஆர். காங்கிரஸால் கடும் தொந்தரவுகளுக்கு ஆளானார். அவமதிக்கப்பட்டார். ஆனால் நாங்களோ என்டிஆர் பிறந்த நூற்றாண்டு நினைவாக ஒரு நாணயத்தை வெளியிட்டுள்ளோம்” என்றார் மோடி.
மேலும், முன்னாள் பிரதமரும் ஆந்திர மாநிலத்தவருமான பி.வி.நரசிம்ம ராவ் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், “பி.வி.நரசிம்மராவுக்கு பாரத ரத்னா வழங்கினோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ அவரை அவமதித்தது. கட்சி வேறுபாடின்றி பொதுமக்களின் அன்புக்குரிய தலைவர்களுக்கு நாங்கள் மரியாதை அளித்துள்ளோம்” என்றார்.
மேலும், நாயுடு மற்றும் பவன் கல்யாண் பற்றி மோசி பேசுகையில், “நாயுடுவும் பவனும் ஆந்திராவின் முன்னேற்றம், மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வருகின்றனர். இரட்டை எஞ்சின் அரசு இங்கு அதிவேக வளர்ச்சியை வழங்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT