Published : 18 Mar 2024 09:23 AM
Last Updated : 18 Mar 2024 09:23 AM
மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று நடைபெற்ற பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது 2-ம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி மும்பையில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.
இதன் நிறைவுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.
மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் (சரத்) சரத் பவார், பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் அழைப்பின் பேரில் நாங்கள் மும்பை வந்துள்ளோம்’’ என்றார். மெகபூபா முப்தி கூறுகையில், ‘‘அரசியல் சாசனத்தை மாற்றுவதற்காக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பாஜக கூறுகிறது. ராகுல் காந்தியின் பெயரில் உள்ள காந்தியை கண்டு பாஜகவினர் பயப்படுகின்றனர்’’ என்றார்.
சரத்பவார் கூறுகையில், ‘வெள்ளையனே வெளியேறு என்ற அழைப்பை மகாத்மா காந்தி மும்பையில் இருந்து விடுத்தார். அதுபோல் ஆட்சியிலிருந்து பாஜக வெளியேற வேண்டும் என்ற அழைப்பை இண்டியா கூட்டணி தலைவர்கள் விடுக்க வேண்டும்’’ என்றார். உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘மக்கள் ஒன்றிணையும்போது, சர்வாதிகாரம் முடிவடைகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தேர்தலில் வெற்றி பெறும் வியூகம் குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT