Published : 18 Mar 2024 07:05 AM
Last Updated : 18 Mar 2024 07:05 AM
புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ உட்பட மத்திய விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி ஏவி விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய நிறுவனங்களை மிரட்டி பாஜக அதிக நிதி பெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்னர் அமலாக்கத் துறை உட்பட மத்திய விசாரணை அமைப்புகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. ஆனால், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை உட்பட அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுரை மட்டுமே வழங்கியது.
ஊழல் விஷயத்தில் ஒரு சதவீதம்கூட பொறுத்துக் கொள்ள முடியாது. அடுத்த முறை மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக இருக்கும். ஊழலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர். அதனால்தான் எனக்கு எதிராக தரக்குறைவாக விமர்சனம் வைக்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்னர் ஊழல் தடுப்பு நடவடிக்கள் தொடர்பாக வெறும் ரூ.5,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே முடக்கப்பட்டன. ஆனால் மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பிறகு ஊழல் வழக்குகள் சம்பந்தப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை உட்பட எந்த விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் நான் தலையிடுவதில்லை.
தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது, சைபர் குற்றங்களில் ஈடுபட்டது, போதைபொருள் கடத்தல் வழக்கு போன்றவற்றில் சம்பந்தப்பட்ட ஏராளமானோரை அமலாக்கத் துறை கைது செய்து அவர்களுடைய சொத்துகளை முடக்கியுள்ளது..
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்படுவது இயல்புதான். அதனால்தான் மோடிக்கு எதிராக அவர்கள் அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர். இந்த நாட்டு மக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கொள்கைகள், உள்நோக்கம், நேர்மை போன்வற்றைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை மக்கள் புறக்கணித்து விட்டனர். இவ்வாறு பிரதமர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT