Published : 18 Mar 2024 07:19 AM
Last Updated : 18 Mar 2024 07:19 AM

பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக குடியேறிய மேலும் 18 இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை

புதுடெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்த தங்கியுள்ள சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக கடந்த 2016 மற்றும் 2018-ல் அரசிதழில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. இதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத், காந்திநகர் மற்றும் கட்ச் மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை வழங்கும் முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து தங்கியிருந்த மேலும் 18 இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில உள் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, பயனாளிகளுக்கு குடியுரிமை ஆவணங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சங்கவி கூறும்போது, “இந்திய குடியுரிமை பெற்றுள்ள நீங்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன். பக்கத்து நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் அகதிகளாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிர முயற்சி மேற்கொண்டனர்” என்றார்.

இதன்மூலம், இதுவரை அகமதாபாத்தில் வசித்து வரும் 1,167 இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கடந்த 11-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x