Published : 18 Mar 2024 05:35 AM
Last Updated : 18 Mar 2024 05:35 AM
சிலகலூரிபேட்டா: மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி இருந்தால், மாநிலத்தின் வளர்ச்சி நன்கு அமையும் என்று ஆந்திராவில் நடந்த தேர்தல்பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனாகட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடி தெலுங்கில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:
வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றுபாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். 3-வது முறையாக பாஜககூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். பாஜகவில் பல கட்சிகள் இணைவதால் நாம் கண்டிப்பாக 400 என்ற இலக்கை கடக்க வேண்டும். பாஜக அரசு மக்களின் அரசு. சேவை மனப்பான்மையுன் பாஜக செயல்பட்டு வருகிறது.
ஏழைகள் குறித்து ஆலோசிக்கும் பாஜக, கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளது. எங்களுக்கு வாக்களித்து தற்போதைய ஜெகன் அரசு மீதுள்ள கோபத்தை மக்கள் தீர்த்துக் கொள்ளலாம். ஆந்திராவை கல்வியின் மாநிலமாக மாற்றுவதே எங்கள் லட்சியம். பாஜக கூட்டணியில் அனைத்து கட்சியினரையும் நாம் ஒரு குடையின் கீழ் அரவணைத்து கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்கள் சுயநலமாக கூட்டணி அமைத்துள்ளனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் கூட்டணி வைத்துள்ளது. ஸ்ரீ ராமருக்கு நாம் அயோத்தியில் கோயில் எழுப்பி உள்ளோம். ஸ்ரீ ராமர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணர் என்றால் நம் கண் முன் நிற்பவர் என்.டி.ராமாராவ். அவர் தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அப்போது இருந்த காங்கிரஸார் அவருக்கு எவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தினர் என்பது மக்களுக்கு தெரியும்.
ஆனால், எங்கள் அரசு என்டிஆர் பெயரில் 2 முறை நாணயங்களை வெளியிட்டது. இதேபோன்று முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவையும் காங்கிரஸார் அவமானப்படுத்தினர். ஆனால், நரசிம்மராவுக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்கி பாஜக அரசு கவுரவித்தது.
ஆந்திர மக்கள் 2 உறுதியை ஏற்க வேண்டும். மத்தியில் பாஜகவை 3-வது முறையாக ஆட்சியில் அமர்த்துவது. 2-வதாக கடந்த 5 ஆண்டுகளாக உங்களை கஷ்டத்தில் தள்ளியவர்களை நிராகரிப்பது. இவை இரண்டும் நிறைவேற வேண்டுமானால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
ஆந்திராவில் ஜெகன் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றேதான். இந்த இரண்டு கட்சி தலைவர்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். இதனால் நமதுவாக்குகளை சிதற விடாமல் கவனமாக பதிவு செய்ய வேண்டும். வரப்போகும் 5 ஆண்டு காலம் நமக்கு மிகவும் முக்கியமான காலம். மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக கூட்டணி இருந்தால், மாநில வளர்ச்சி நன்கு அமையும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
மோடி நம் நாட்டின் நம்பிக்கை: தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியபோது, ‘‘எங்கள் கொடிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், எங்களின் கொள்கை எல்லாம் மாநில வளர்ச்சி மீதே உள்ளது. மோடி என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு சக்தி. நம் நாட்டின் நம்பிக்கை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு சமமான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. மோடியின் தலைமையில் நாடே வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆதலால் நம் ஆந்திராவும் வளர்ச்சி பெற வேண்டும்’’ என்றார்
ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசியபோது, ‘‘10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள பாஜக - தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி கூட்டணியாக அமையும். ஆந்திர முதல்வர் ஜெகன் ஒரு சாராய வியாபாரி, மணல் கொள்ளைக்காரர். இவரது ஆட்சியில் கஞ்சா தலைநகரமாகி விட்டது ஆந்திரா. 30,196 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதுவரை ஜெகன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்ததேர்தலில் தர்மமே வெற்றி பெற வேண்டும்’’ என்றார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, நடிகர் பாலகிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT