Published : 16 Feb 2018 12:35 PM
Last Updated : 16 Feb 2018 12:35 PM
தனது மனைவியின் உடல்நலம் சரியாக வேண்டும் என, சந்திர கிரகணத்தன்று 3 மாத பெண் குழந்தையைக் கடத்தி, நரபலி கொடுத்த டாக்ஸி ஓட்டுநரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் மகேஷ் பகவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹைதராபாத் உப்பல் சிலக்நகர் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் ராஜசேகர். இவரது மனைவி லலிதா. லலிதாவிற்கு சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை.
ஆனால் மூட நம்பிக்கை அதிகமுள்ள ராஜசேகர், தனது மனைவியின் உடல் நலம் சரியாக மாந்திரீகர்களை நாடினார். அப்போது மாந்திரீகர் ஒருவர், சந்திர கிரகணத்தன்று பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்து, அதன் தலையை வீட்டில் வைத்து நிர்வாண பூஜை செய்து, பின்னர் அந்தத் தலையை, வீட்டின் மீது கிரகண வெளிச்சம் படும் படி வைத்தால், உன் மனைவிக்கு பூரண உடல் நலம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
அவரின் பேச்சை நம்பிய ராஜசேகர், கடந்த 31ம் தேதி இரவு, சந்திர கிரகணத்தன்று, போயகூடா பகுதியில் பிளாட்பாரம் மீது தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தனது காரில் கடத்தி வந்தார். பின்னர் மூசி நதிக்கரையில் குழந்தையின் தலையை வெட்டி, உடலை அந்த நதியில் வீசியுள்ளார்.
அதன் பின்னர் குழந்தையின் தலையை மட்டும் ரத்தம் உறைந்த பின்னர், அதனை ஒரு பையில் போட்டு தனது வீட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர், சந்திர கிரகணத்தின் இரவன்று, வீட்டில் இவரும், இவரது மனைவியும் குழந்தையின் தலைக்கு முன்னே நிர்வாண பூஜை நடத்தியுள்ள்னர். அடுத்து, ராஜசேகர் அந்தத் தலையை தனது வீட்டின் மேற்கூரையில், சந்திரனின் வெளிச்சம் விழும்படி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டில் ரத்தக் கறைகளை ரசாயனங்களால் சுத்தமாகக் கழுவி உள்ளனர்.
மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி, காலை ராஜசேகரின் அத்தை அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவர், மாடி மீது உள்ள துணிகளை கொண்டு வர மொட்டை மாடிக்குச் சென்றார். அங்கு ஒரு குழந்தையின் தலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். இதனால், ராஜசேகரும், அவரது மனைவியும் கூட அனைவருடன் சேர்ந்து அதிர்ச்சி அடைந்தது போல் நடித்தனர். பின்னர் இது குறித்து உப்பல் போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். போலீஸாரை திசை திருப்பவும் ராஜசேகர் பல சூழ்ச்சிகளைக் கையாண்டார்.
ஆனால், போலீஸார் குழந்தையின் ரத்தத்தையும், வீட்டில் இருந்த சில ரத்தக் கறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், இவை இரண்டும் ஒன்றே எனத் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக ராஜசேகரை கைது செய்யாமல், அவரை ரகசியமாக பின் தொடர்ந்தோம். அவரது வீட்டிற்கு அருகே சுமார் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவரது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தோம்.
மேலும் அவரது செல்போன் எண்ணையும் அவருக்குத் தெரியாமல் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவருக்கு வந்த போன் கால்களில் நரபலி குறித்து அடிக்கடி பேசியதும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 15 நாட்களில் 45 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக ராஜசேகர்தான் கொலையாளி எனத் தெரிந்தபின்னர் அவரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இது வரை பலி கொடுக்கப்பட்ட குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு போலீஸ் ஆணையர் மகேஷ் பகவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT