Published : 17 Mar 2024 11:11 AM
Last Updated : 17 Mar 2024 11:11 AM
பிஹாரில் மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவான போதிலும் இதற்கான அறிவிப்பை லாலு நிறுத்தி வைத்துள்ளார். சிராக் பாஸ்வான் அல்லது பசுபதி பராஸ் வருகையை எதிர்நோக்கி அவர் காத்துள்ளார்.
பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ-எம்எல் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை லாலு சுமூகமாக முடித்துள்ளார்.
பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆர்ஜேடி 28, காங்கிரஸ் 9, சிபிஐ-எம்எல் 2, இ.கம்யூனிஸ்ட் 1 தொகுதி என முடிவாகி உள்ளது. எனினும் இதற்கான அறிவிப்பை லாலு நிறுத்தி வைத்துள்ளார். லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலே இதற்கான காரணம் ஆகும்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கட்சியான எல்ஜேபி, அவரது மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்தது. பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் முக்கிய அணியும் சிராக்கின் சித்தப்பா பசுபதி பராஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன. என்றாலும் இரு அணிகளும் என்டிஏ.வில் உள்ளன.
இதில் சிராக் பாஸ்வான் தனது தந்தை 9 முறை வென்ற ஹாஜிபூரில் தன் தாய் ரீனா பாஸ்வானை நிறுத்த விரும்புகிறார். ஆனால் அதே தொகுதி எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான பசுபதி பராஸ் அங்கு மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ளார். இந்த மோதலை பசுபதிக்கு ஆளுநர் பதவி அளித்து முடித்து வைக்க பாஜக முயற்சிக்கிறது.
ஆனால் ஹாஜிபூர் கிடைக்கவில்லை எனில் மெகா கூட்டணிக்கு செல்லப் போவதாக பசுபதி பராஸ் மிரட்டி வருகிறார். அதே சமயம் சிராக் பாஸ்வானுக்கும் மெகா கூட்டணி வலை வீசியுள்ளது.
மெகா கூட்டணியில் அவருக்கு 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கவும் தயாராகி வருகிறது. இதனால், சிராக் அல்லது பசுபதி தங்கள் பக்கம் வருவார்கள் என லாலு எதிர்பார்க்கிறார். இதனால் அவர், மெகா கூட்டணி தொகுதிப் பங்கீடு அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT