Published : 17 Mar 2024 11:10 AM
Last Updated : 17 Mar 2024 11:10 AM
ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கடப்பாவில் தமது கட்சியை சேர்ந்த மொத்தம் 175 சட்டப்பேரவை மற்றும் 24 மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில், நகரி தொகுதியில் நடிகை ரோஜா மீண்டும் களத்தில் இறங்குகிறார்.
ஆந்திர மாநிலத்தில் வரும் மே மாதம் 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று ஆந்திராவில் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை, கடப்பா மாவட்டம், இடுபுலபாயா பகுதியில் உள்ள மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சமாதியில் வைத்து முதல்வர் ஜெகன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வழிபட்டனர். அதன் பின்னர், 175 சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அமைச்சர் தர்மானா பிரசாத் ராவ், முதல்வர் ஜெகன் முன்னிலையில் படித்தார்.
அதன்படி, நகரி தொகுதியில் மீண்டும் அமைச்சர் ரோஜா 3-வது முறையாக போட்டியிடுகிறார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம், புலிவேந்துலாவில் களம் இறங்குகிறார். ஆந்திராவில் ஏற்கனவே எம்எல்ஏவாக பதவி வகித்த 81 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். சிலருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் அனகாபல்லி தொகுதியை தவிர்த்து மற்ற 24 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று முதல்வர் ஜெகன் முன்னிலையில், எம்பி நந்திகம் சுரேஷ் படித்தார். இதில், 18 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். சிலர் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT