Published : 16 Mar 2024 04:07 PM
Last Updated : 16 Mar 2024 04:07 PM
புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் அட்டவணையை அறிவித்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர். நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 7 கட்டங்களாக தேர்தல் - ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதன் விவரம்:
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே கட்ட தேர்தலுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம்:
* வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
* வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
* வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28
* வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
* வாக்குப்பதிவு- ஏப்ரல் 19
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 1#GeneralElections2024 #MCC pic.twitter.com/IglWUjkcSK
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: அதேபோல் ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதியும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் மே 13 ஆம் தேதியும், 32 தொகுதிகள் கொண்ட சிக்கிம்மில் ஏப்ரல் 19 ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 147 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் மட்டும் மே 13, மே 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4-ல் நடத்தப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் எப்போது? - மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: பிஹார் (1), குஜராத் (5), ஹரியாணா (1), ஜார்க்கண்ட் (1), மகாராஷ்டிரா (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (4), மேற்கு வங்கம் (2), தெலங்கானா (1), இமாச்சல் பிரதேசம் (6), ராஜஸ்தான் (1), கர்நாடகா (1), தமிழ்நாடு (1) என மொத்தம் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் விஜயதரணி ராஜினாமாவால் காலியான விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முன்னதாக, மக்களவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக மேலும் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பு இதுதான். மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மக்களவைத் தேர்தலை நடத்த நாங்கள் முழு வீச்சில் தயாராக இருக்கிறோம். தேர்தலை திருவிழா போல் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து வாக்காளர்களாகிய நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள்.
96.8 கோடி வாக்காளர்கள்: 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண்கள். மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேர். மாற்று பாலினத்தவர் 48 ஆயிரம் பேர். மொத்த வாக்காளர்களில் 1.82 கோடி பேர் முதன்முறை வாக்காளர்களாவர். 85 வயதைக் கடந்த வாக்காளர்கள் 82 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர்.
10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்: வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் விவரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: மிகுந்த உயர்ந்த தரத்தில் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். தேர்தல் நேரத்தில் போலி செய்திகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரையில், ட்ரோன் மூலம் மாநில எல்லைகள், சில சர்வதேச எல்லைகளில் கண்காணிக்கப்பு மேற்கொள்ளப்படும். தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். ஹெலிகாப்டர்கள், தனி விமானங்களில் கூட தீவிர சோதனை நடத்தப்படும்.
தேர்தலில் ஆள் பலம், பணப் பலம், வதந்திகள், விதிமுறை மீறல்கள்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 24*7 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். வாக்குக்கு பணம், பொருட்கள், மது அளித்தால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
வங்கிகள் தங்கள் வாகனங்களில் மாலை 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் தீவிரமாகக் கண்காணிப்படும். தேர்தல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை: அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வோடு பிரச்சாரம் செய்ய வேண்டும். சமூக வலைதளப் பிரச்சாரங்களையும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரப் பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். சாதி, மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் சிறார்கள், மாற்றுத் திறனாளிகளைப் பயன்படுத்தக் கூடாது.மக்களவைத் தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்தப்படும். மக்களவைத் தேர்தல் பணியில் 1.5 கோடி பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாடு முழுவதும் 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்றார்.
Watch LIVE : Press Conference by Election Commission to announce schedule for General Elections 2024 to Lok Sabha & State Assemblies https://t.co/M8MRkdUdod
— Election Commission of India (@ECISVEEP) March 16, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT