Published : 16 Mar 2024 01:31 PM
Last Updated : 16 Mar 2024 01:31 PM

யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை நீட்டிப்பு: மேலும் 4 அமைப்புகளுக்கும் தடை

யாசின் மாலிக் | கோப்புப் படம்

புதுடெல்லி: முகம்மது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. அதோடு, மேலும் 4 அமைப்பகளுக்கு புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகம்மது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2019ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 'ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (முகமது யாசின் மாலிக் பிரிவு)' சட்டவிரோத அமைப்பு என்று மோடி அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களையும், அமைப்புகளையும் மோடி அரசு காப்பாற்றாது. தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால்விடும் எவரும் கடுமையான சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

முகம்மது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 4 அமைப்புகளுக்குத் தடை: இதேபோல், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (முக்தர் அகமது வாசா), ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (பஷிர் அகமது டோட்டா), ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (குலாம் முகம்மது கான்), ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (அசிஸ் ஷேக்) ஆகிய 4 அமைப்புகளுக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள அமித் ஷா, “பயங்கரவாதத்துக்கு எதிரான ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த கொள்கையின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (முக்தர் அகமது வாசா), ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (பஷிர் அகமது டோட்டா), ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (குலாம் முகம்மது கான்), ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (அசிஸ் ஷேக்) ஆகிய 4 அமைப்புகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவை என அறிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்புகள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களிலும், பிரிவினையைத் தூண்டும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு தடை செய்யப்பட்ட சில நாட்களில் இந்த தடை உத்தரவு வெளியாகி இருக்கிறது. எந்த ஒரு அமைப்பையும் சட்டவிரோத அமைப்பாக அரசிதழில் அறிவிக்கும் அதிகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்(Unlawful Activities (Prevention) Act, 1967) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x