Published : 16 Mar 2024 02:03 PM
Last Updated : 16 Mar 2024 02:03 PM
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 அமல்படுத்தபட்டிருப்பதற்கு தடை விதிக்கக் கோரி ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி உச்ச நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து ஒவைசி தாக்கல் செய்துள்ள மனுவில், “சிஏஏ தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பிரிவு 6பி -ன் கீழ் குடியுரிமை கோரும் எந்த ஒரு விண்ணப்பத்தையும் அரசு ஏற்கவோ அல்லது பரிசீலனை செய்யவோ கூடாது. அதற்கேற்ப உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த கூட்டமொன்றில் ஒவைசி பேசுகையில், “மாநிலத்தில் நடத்தப்பட்ட என்சிஆர்-ல் பட்டியலிடப்பட்ட 12 லட்சம் இந்துக்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். ஆனால், 1.5 லட்சம் முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்கள் (முஸ்லிம்கள்) 1962ல் வந்தார்களா அல்லது 1951ல் வந்தார்களா என்று கேட்கப்படும். அ
வர்களுடைய தாத்தாவினுடைய பிறப்புச் சான்றிதழ் காட்டுமாறு கூறப்படும். என்சிஆர் கணக்கெடுப்பில் வராத 1.5 லட்சம் முஸ்லிம்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்துக்குச் சென்று போராடுமாறு அலைக்கழிக்கப்படுவார்கள்.பாஜகவினர் உடனடியாக எதுவும் நடக்காது என்று கூறுகிறார்கள். நான் அவர்களுக்கு சிஏஏ சிக்கல் உடனடியாக வெளியே வராது என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
சிஏஏ அமலும், சர்ச்சையும்: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. என்றாலும் அதற்கான விதிகள் இந்த வாரத்தின் (திங்கள்கிழமை) தொடக்கத்தில் வெளியிட்டப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள்,சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் 200 க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை மார்ச் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்ட அறிவிப்பு எதிர்க்கட்சிகளின் கண்டனத்து உள்ளாகியுள்ளது. இந்த அறிவிப்பு, அரசியல்சட்டத்துக்கு விரோதமானது, பாரபட்சமானது, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதசார்பற்ற குடியுரிமைக் கொள்கையை மீறுவதாக உள்ளது என்று விமர்சித்துள்ளன. என்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT