Published : 16 Mar 2024 06:04 AM
Last Updated : 16 Mar 2024 06:04 AM

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில்: மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

படம்: எக்ஸ் தளம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு- மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதானத்தில் இருந்து எஸ்பிளனேடு வரை 4.8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 520 மீட்டர் நீளமுள்ள பாதை ஹூக்ளி நதிக்கு அடியில் செல்கிறது. இதற்காக நதிக்கு அடியில் 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் மிக ஆழமான ரயில் நிலையமான ஹவுரா மைதான நிலையம் 32 மீட்டர் ஆழத்தில் உள்ளது. ரயில் பாதையின் ஆழம், வளைவு, மண்ணின் தன்மை, வடிவமைப்பு காரணமாக இந்த வழித்தடம் பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 6–ம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் சேவை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

ஹவுரா மைதானத்தில் இருந்து ஒரு ரயில் காலை 7 மணிக்கு புறப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு ரயில் எஸ்பிளனேடு நிலையத்தில் இருந்து பயணிக்கத் தொடங்கியது.

இந்த ரயிலின் முதல் சேவையில் பயணிக்க டிக்கெட் கவுன்ட்டர்களில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். நீருக்கு அடியில் செல்லும் நாட்டின் முதல் ரயிலில் மக்கள் பயணித்தபோது 'வந்தே பாரத்', 'பாரத் மாதா கீ ஜே' என உற்சாகமாக முழக்கம் எழுப்பியபடி சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x