Published : 16 Mar 2024 06:08 AM
Last Updated : 16 Mar 2024 06:08 AM
புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையம் (இசிஐ) தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை உறுப்பினர்களாக கொண்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையப் பதவியில் இருந்து வந்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான குழு 14-ம் தேதி கூடியது. அப்போது ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.
முன்பு இருந்த நடைமுறைகளின்படி புதிய தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட குழு தேர்வு செய்து வந்தது.
ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, இந்த குழுவில் பிரதமர், மத்திய அமைச்சர்ஒருவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்தது மத்திய அரசு. இந்த புதிய சட்டப்படி உருவாக்கப்பட்ட தேர்வுக் குழுதான் முதல்முறையாக நேற்று முன்தினம் கூடியது. பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை கொண்ட குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில் கூடுதலாக தேர்வுக்குழு தலைவரான மத்திய சட்டஅமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் பங்கேற்றார்.
இதற்கிடையில், புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: அண்மையில் இயற்றப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல்ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) சட்டம், 2023-ன் கீழ் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஜெயா தாக்குர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 21-ம் தேதி நடைபெறும் என்றும் அமர்வு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT