Published : 16 Feb 2018 01:22 PM
Last Updated : 16 Feb 2018 01:22 PM
பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு அநீதி இழைத்ததைக் கண்டிக்கும் வகையில், இன்று காலை திருப்பதியில் எம்பி சிவப்பிரசாத் தன் காதுகளில் பூக்களை வைத்துக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதிகளை அறிவிக்காததற்கு, பாஜ கட்சியின் தோழமை கட்சியும், ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் உட்பட ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக சமீபத்தில் ஆந்திராவில் ஒருநாள் அடையாள பந்த் நடத்தப்பட்டது. மேலும், வரும் மார்ச் மாதம் 5ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்காவிடில், ஏப்ரல் 6ம் தேதி தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதனால், மார்ச் மாதத்திலேயே தோழமைக் கட்சியான தெலுங்கு தேசமும், தங்களுடைய மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்யும் அளவிற்கு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை, திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு அரங்கில், சித்தூர் எம்பி சிவப்பிரசாத் நூதன முறையில் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அவர், தனது காதுகளில் தாமரைப் பூக்களை வைத்துக்கொண்டு, பாஜ அரசு ஆந்திராவை ஏமாற்றி விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து எம்பி சிவப்பிரசாத் பேசுகையில், "மக்களின் நலனுக்காகவே பாஜ வுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மாநில பிரிவினை மசோதாவில் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதிகள் ஏதும் முழுமையாக வழங்கப்படவில்லை. இறுதி பட்ஜெட்டிலும் ஆந்திராவிற்கு சிறப்பு நிதிகள் வழங்காமல் பாஜ அரசு ஆந்திராவை ஏமாற்றிவிட்டது.
இதே விளையாட்டு அரங்கில், கடந்த 2014ம் ஆண்டு, பிரதமர் மோடி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என திருப்பதி ஏழுமலையான் சாட்சியாக பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதனால் இதே இடத்தில் நான் காதில் பூ வைத்து எனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன். ஆந்திர மக்களை பாஜ ஏமாற்றினால், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கதிதான் பாஜவிற்கும் ஏற்படும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT