Published : 15 Mar 2024 07:46 PM
Last Updated : 15 Mar 2024 07:46 PM
குமரி கூட்டத்தில் திமுக மீது பிரதமர் மோடி சரமாரி தாக்கு: கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழில் சகோதர சகோதரிகளே எனக் கூறி பேசத்தொடங்கிய பிரதமர் மோடி, “மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது.
நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். தமிழகத்தில் இண்டியா கூட்டணி எடுபடாது. அவர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களுடைய கொள்கையே அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான். ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், மற்றொரு பக்கம் இண்டியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள் இருக்கின்றன.
திமுக தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. நமது கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி. உச்ச நீதிமன்றமே தமிழகத்தை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பிரதமர் பேசினார்.
சிஏஏ அமல் - பாஜக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு: “2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, ஒன்றிய பாஜக ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மைத் தன்மையைச் சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, நமது இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இஸ்லாமியர் மீதான வெறுப்பைச் சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது.
இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
‘உதயநிதிக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது’
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“தேர்தல் புறக்கணிப்பு இல்லை” - ஓபிஎஸ் விளக்கம்: “வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம். இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவினை தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தல் தேதி சனிக்கிழமை அறிவிப்பு: மக்களவைத் தேர்தல் அட்டவணை, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடயிருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். அவர்கள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வந்து வெள்ளிக்கிழமை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வரவேற்றார்.
“பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... ராகுல் யாத்திரை விளைவு”: பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பது நல்லது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மத்திய அரசில் சில தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ‘பாண்ட்’ எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 18-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை விசாரணையின்போது எஸ்பிஐ வங்கி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகததற்கும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அதில் நிறுவனங்கள், கட்சிகள் மற்றும் நிதி விவரம் இடம்பெற்றிருந்தன. ஆனால், எந்தெந்த நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகளுக்கு நிதி சென்றது என்பதை தெளிவுபடுத்தும் தேர்தல் பத்திர எண்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பத்திர விவகாரம்: பாஜக மீது எதிர்க்கட்சிகள் சாடல்: “நான் தேர்தல் பத்திரங்கள் குறித்து ஒரு சிறிய பகுப்பாய்வு செய்தேன். அதில் தேர்தல் பத்திரங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. 60 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளன. அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வின் மூலம் நான் வெளிப்படுத்தியுள்ளேன். நன்கொடை கொடுத்தவர்கள் அரசு ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலம் பலன்பெற்றுள்ளார்கள், இது ஒரு கூட்டுச் சதி” என்று காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் மிகப் பெரிய ஊழலில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் வாங்கியதன் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளது" என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டியுள்ளார்.
“2ஜி வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தியது போல இந்தத் தேர்தல் பத்திரம் விவகாரத்திலும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் பிஎம் கேர்ஸ்-க்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுத்தது என்பது விசாரணைக்கு உரிய விஷயம்.” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா மீது போக்சோ வழக்குப் பதிவு: கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாயார் அளித்தப் புகாரின் பேரில் பெங்களூரு சதாசிவநகர் போலீஸார் வியாழன் இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டப்பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 354 A ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிஏஏ அமல் குறித்து அமெரிக்கா கருத்து: “மார்ச் 11 ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தின் அறிவிப்பு குறித்த விவரங்களை இந்தியா வெளியிட்டது. இது எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்துக்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவதுதான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடு” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, "இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு குறித்து வரையறுக்கப்பட்ட புரிதல் உள்ளவர்களின் கருத்துக்கள் ஏற்கும்படியானது அல்ல. சிஏஏவை அமல்படுத்துவது குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது, தவறான தகவல்களைக் கொண்டது மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம்" என குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அமெரிக்காவின் விமர்சனத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
மம்தா பானர்ஜி காயம்: விசாரணைக்கு பாஜக தலைவர் வலியுறுத்தல்: திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் வலியுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT