Published : 15 Mar 2024 07:28 PM
Last Updated : 15 Mar 2024 07:28 PM
ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை, அமலாக்கத் துறை ஹைதராபாத்தில் கைது செய்தது.
தெலங்கானா சட்டப்பேரவை எம்எல்சியாக உள்ள அவர், ஹைதாராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இன்று நண்பகல் அவரது வீட்டுக்கு மூன்று வாகனங்களில் சென்ற அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதையடுத்து, பாரத் ராஷ்ட்ர சமிதியின் தொண்டர்கள் கவிதாவின் வீட்டின் முன்பாக குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
சோதனையின் முடிவில், கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரத் ராஷ்ட்ர சமிதியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரசாந்த் ரெட்டி, "கவிதாவை டெல்லிக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கவிதாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர் என்பதாகவே தெரிகிறது. அவர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே, கவிதாவுக்கும் விமான டிக்கெட் எடுத்துள்ளனர்" என தெரிவித்தார்.
பாரத் ராஷ்ட்ர சமிதியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரவன் தாசோஜு கூறுகையில், "இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் செயல்பட்டுள்ளன. பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் செல்கின்றன. தற்போது தெலங்கானாவில் அதுதான் நடந்துள்ளது.
பாரத் ராஷ்ட்ர சமிதியில் பீதியை ஏற்படுத்த அவர்கள் முயல்கிறார்கள். பாஜகவின் கைப்பாவையாக அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் செயல்படுகின்றன. தெலங்கானாவில் மிகப் பெரிய அளவில் சொத்து சேர்த்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை" என தெரிவித்தார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சவுத் குருப் என்ற பெயரில் கவிதா, சரத் ரெட்டி, முகுந்தா சீனிவாசலு ரெட்டி ஆகியோர் செயல்பட்டுள்ளதாகவும், இவர்களிடம் இருந்து விஜய் நாயர் என்பவர் ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பாக ரூ. 100 கோடியை பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT