Published : 15 Mar 2024 06:49 PM
Last Updated : 15 Mar 2024 06:49 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். பாஜக இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், மைசூர் தொகுதியில் பாஜக சார்பில் மைசூர் மன்னர் குடும்ப வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் களம் காண்கிறார். மைசூர் தொகுதியில் மன்னர் குடும்பத்தினர் தேர்தல் களத்தில் இறங்குவது இது முதல் முறையல்ல. இருப்பினும், பாஜகவின் கடுமையான வியூகத்துக்கு மத்தியில், மைசூரின் மன்னரே வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியில் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் பாஜக இம்முறை 10 புதிய முகங்களுடன் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தர்வாத் தொகுதியில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலிருந்து போட்டியிடுகின்றனர். பாஜக இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்குத் தொகுதியின் வேட்பாளராக களம் இறங்குகிறார். மைசூரில் இம்முறை யதுவீர் கிருஷ்ணதத்தா வதியாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை இந்தத் தொகுதியில் பிரதாப் சிம்ஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பாஜக-வின் வியூகம் என்ன? - தேர்தலில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான, பிரபலமான முகங்களை களமிறக்கினால் வாக்குகளை எளிதில் பெற்றுவிட முடியும் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள புதுவிதமான யுக்திகளை கையாண்டு வருகிறது. சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் முதல்வர்களின் மகன்கள் என களத்தில் இறக்கி தேர்தல் களத்தை அதகளமாக்கி வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது மைசூர் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் மைசூர் மன்னர். மன்னர் ஆட்சி காலம் முடிந்துவிட்ட நிலையிலும், புது யூகத்தை வகுத்துள்ளது பாஜக.
பிரதாப் சிம்ஹா: சில தினங்களுக்கு முன் மர்மநபர்கள் நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்திய சம்பவம் இந்திய அளவில் கவனம் பெற்றது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இருவர் மைசூர் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. மைசூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை பாஜக சார்பில் எம்.பி ஆனவர் பிரதாப் சிம்ஹா என்பது கவனிக்கத்தக்கது. தற்போது பிரதாப் சிம்ஹா, “மைசூர் - குடகு தொகுதியில் போட்டியிடும் யதுவீருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இன்னும் இரண்டு நாட்களில் பாஜகவுக்காக பிரசாரம் செய்யத் தொடங்குவேன்” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த யதுவீர் வாடியார்? - வாடியார் வம்சத்தினர் 1399 முதல் 1947 வரை மைசூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்தனர். 31 வயதாகும் யதுவீர் வாடியார், மைசூர் அரசின் 25-வது மகாராஜா ஜெயராமச்சந்திர வாடியாருடைய பேரன் ஆவார். இவருக்கு முன்னதாக பொறுப்பேற்ற நரசிம்மராஜ வாடியார் யதுவீரை தத்தெடுத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மைசூர் அரச குடும்பத்தின் 27-வது அரசராக யதுவீர் பதவியேற்றார்.
தனது பள்ளிப் படிப்பை மைசூரின் வித்யா நிகேதன் பள்ளியில் பயின்றார். பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றுள்ளார். அங்கு ஆங்கிலம் மற்றும் பொருளாதார துறைகளில் பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு கிட்டார், வீணை போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதிலும் ஈடுபாடு அதிகம் எனக் கூறப்படுகிறது. யதுவீர் வாடியார் ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த திரிஷ்கா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
திரிஷ்காவுடைய தந்தை ஹர்ஷவர்தன் சிங், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மைசூர் அரச குடும்பம் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பது இது ஒன்றும் புதிதல்ல. யதுவீருக்கு முன்னதாக ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ வாடியார் நான்கு முறை, காங்கிரஸ் சார்பாக மைசூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். பின்னர் 1991ல் பாஜக சார்பிலும், 2003 ல் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய மைசூர் பகுதியில் (தெற்கு கர்நாடகா) மன்னர் குடும்பத்துக்கு இன்னும் கணிசமான மரியாதையும், செல்வாக்கும் இருக்கிறது. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் வருகையின் மூலம் மைசூர் மன்னர் பரம்பரையின் அரசியல் பிரவேசம் மீண்டும் தொடங்கி உள்ளது. இவை வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
யதுவீர் வாடியார் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாகவே இருக்கிறார். பாரம்பரியமாக காங்கிரஸின் கோட்டையாகவும், முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமாகவும் விளங்கும் மைசூரில், காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
முந்தைய அத்தியாயம்: தேவகவுடா குடும்பத்துக்கு 3 தலைமுறையாக ‘டஃப்’... ஷ்ரேயஸ் படேல் யார்? | 2024 தேர்தல் கள புதுமுகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT