Published : 15 Mar 2024 11:55 AM
Last Updated : 15 Mar 2024 11:55 AM

“பெட்ரோல், டீசல்  விலை குறைப்பு இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் விளைவு”- ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப்படம்

பால்கர் (மகாராஷ்டிரா): பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பது நல்லது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மத்திய அரசில் சில தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது நல்லது. பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வந்தார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் பத்திரங்கள் குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “நான் தேர்தல் பத்திரங்கள் குறித்து ஒரு சிறிய பகுப்பாய்வு செய்தேன். அதில் தேர்தல் பத்திரங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. 60 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளன.

அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறை எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வின் மூலம் நான் வெளிப்படுத்தியுள்ளேன். நன்கொடை கொடுத்தவர்கள் அரசு ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலம் பலன்பெற்றுள்ளார்கள், இது ஒரு கூட்டுச் சதி” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ராம், “இப்படிதான் நடக்கும். எங்களுடையத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் குழுவில் அரசுக்கு பெரும்பாண்மை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை சுமார் 40% குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாத நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்திருந்தார். மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x