Published : 15 Mar 2024 09:54 AM
Last Updated : 15 Mar 2024 09:54 AM
கடந்த தேர்தல்களில் அதிகளவில் பணம், பொருட்கள் பறிமுதல் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் துணை ராணுவப்படையை அனுப்பியுள்ளதுடன், பண நடமாட்டத்தை கண்காணிக்க வருமான வரி, வங்கித்துறை உள்ளிட்ட துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான தேதிகளை அறிவித்துவிட்டாலே, நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின், பணம், பரிசுப்பொருட்கள் பரிமாற்றங்கள் மீதான கண்காணிப்பு அதிகரிக்கும். 2019 தேர்தலின்போது தமிழகத்தில் மட்டும் ரூ.208.27 கோடி பணம் உட்பட ரூ.514 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல், 2021 பேரவை தேர்தலில் தமிழகத்தில் ரூ.236.70 கோடி பணம் உட்பட ரூ.446.28 கோடி மதிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில், உரிய ஆவணங்களை காட்டியவர்களுக்கு பணம், பொருட்கள் திருப்பித் தரப்பட்டன. அதேபோல், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, துறை நடவடிக்கைக்கு ஆளானவர்களும் உண்டு.
இதுமட்டுமின்றி, முந்தைய தேர்தல்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், தமிழகத்தை தேர்தல் ஆணையம் செலவின பதற்றம் நிறைந்த தொகுதிகள் நிறைந்த மாநிலமாகவே கருதுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வெளியானதும், மாநிலத்துக்கு தேவையான அளவு துணை ராணுவப் படையினரை தேர்தல் ஆணையம் அனுப்பும்.
அவர்களும் வந்து உள்ளூர் போலீஸாருடன் இணைந்து, பறக்கும்படை, நிலையான கண்காணிப்புப்படை உள்ளிட்ட படையில் இணைந்து சோதனைப் பணியில் ஈடுபடுவார்கள்.
ஆனால், இந்த முறை, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, தமிழகத்தில் துணை ராணுவப்படையில் ஒரு பகுதியை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக, தமிழகத்துக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளும், அடுத்ததாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாரும் வந்து ஆய்வு நடத்தினர்.
ராஜீவ்குமார் சென்னை வந்தபோது, வருமான வரி, சுங்கம், வருவாய் புலனாய்வுத் துறைகள், பல்வேறு துணை ராணுவப்படைகளின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன்பின், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுதவிர, முந்தைய தேர்தல்களின்போது பார்வையாளர்களாக வந்தவர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், முன்கூட்டியே துணை ராணுவப் படையினரை அனுப்பி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்துக்கு கடந்த தேர்தல்களின்போது 160 கம்பெனிதுணை ராணுவப் படையை அனுப்பிய தேர்தல் ஆணையம் இம்முறை 200 கம்பெனிகளை அனுப்ப முடிவெடுத்துள்ளது.
இதில், தற்போது 25 கம்பெனிகள் தமிழகம் வந்துள்ளன. இந்த படையினர் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, தேர்தலுக்கு முன்னதாகவே பணம், பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரயில், பேருந்துகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் அதி விரைவு ரயில்கள், வெகு தூரத்தில் இருந்து வரும் ரயில்களில் வரும் பார்சல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இன்னும் கண்காணிப்பு தீவிரமடையும் என்று தேர்தல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
புதிய செயலி! - தகவல் பரிமாற்றத்துக்காக தனி செயலியை தமிழக தேர்தல் துறை உருவாக்கி உள்ளது. ஒரு இடத்தில் பணம் அதிகம் இருப்பதாக தகவல் பெறப்பட்டால், அந்த தகவல் உரிய துறைக்கு பரிமாறப்படுவதில் தாமதம் ஏற்படும். இதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறைகளின் பொறுப்பு அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளின் செல்போனுக்கே உடனடியாக விவரங்கள் செல்லும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT