Published : 15 Mar 2024 06:12 AM
Last Updated : 15 Mar 2024 06:12 AM
புதுடெல்லி: ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட வேட்டை நாய்கள் மூர்க்கமானவை. இவற்றை செல்லப்பிராணியாக வளர்த்தல் அல்லது வேறு காரணங்களுக்காகப் பராமரித்தல் என்பது சில நேரம் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. இவற்றால் கடித்து குதறப்பட்டு பொது மக்கள் படுகாயமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு.
இது தொடர்பாக மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேட்டை நாய்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ராட்வீலர், பிட்புல் டெரியர், டோசாஇனு, அமெரிக்கன் ஸ்டான்போர்ட்ஷைர் டெரியர், ஃபிலா பிரசிலியரோ, டோகோ அர்ஜண்டீனோ, அமெரிக்கன் புல்டாக், போஸ்பெல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகேஷியன் ஷெப்பர்ட் நாய்,தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட் இன நாய், டார்ஞாக், ஓநாய் வகை நாய்கள், மாஸ்கோ கார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு ரக நாய்களை வாங்கவோ, விற்கவோ இனி உரிமம் வழங்கப்படக் கூடாது.
ஏற்கெனவே வளர்க்கப்பட்டு வரும் இவ்வகை நாய்கள் இனப்பெருக்கம் செய்யாதபடி கருத்தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கலப்பின நாய்களின் வளர்ப்புக்கும் இது பொருந்தும். இதற்கு உரிய வழிகாட்டுதல்களை உள்ளூர் விலங்கு நல வாரியங்கள் வழங்கும். டெல்லி உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்கீழ் நியமிக்கப்பட்ட விலங்கு நல வல்லுநர்கள் முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023 டிசம்பர் 6-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் வெளிநாட்டு நாய்களுக்குத் தடை விதித்தல் குறித்து பொது மக்கள், விலங்கு நல அமைப்புகளுடன் கலந்து பேசி மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இந்த பரிந்துரையை ஏற்று வெளிநாடுகளிலிருந்து வேட்டை நாய்களை இறக்குமதி செய்து இந்தியாவில் வளர்க்கத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT