Published : 15 Mar 2024 05:06 AM
Last Updated : 15 Mar 2024 05:06 AM
புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் நலத் துறை செயலர் அடங்கிய குழு, தகுதியுள்ள அதிகாரிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை குழு நேற்று கூடியது. இக்கூட்டத்தில், சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சுக்வீர் சிங் சந்து, பஞ்சாப்பை சேர்ந்தவர். எம்பிபிஎஸ், சட்டம் பயின்றவர்.
ஞானேஷ் குமார், 370-வது சட்டப்பிரிவு நீக்கம், காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் முக்கிய பணியாற்றியவர். ஐஏஎஸ் அதிகாரிகளான இருவரும்பணி ஓய்வுக்கு பிறகு, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனத்துக்கான அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று இரவு வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT