Published : 15 Mar 2024 05:11 AM
Last Updated : 15 Mar 2024 05:11 AM
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் எக்ஸ் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.2 குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய விலை மார்ச் 15-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் செலவு கணிசமாக குறையும். அத்துடன் 58 லட்சம் கனரகவாகனங்கள், 6 கோடி கார்கள்,27 கோடி இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிலிண்டரை தொடர்ந்து.. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ரூ.100 குறைத்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் விரைவில்வெளியிடும் என்று எதிர்பார்க் கப்படும் சூழலில், பெட்ரோல் டீசல் விலையையும் தற்போது மத்திய அரசு குறைத்துள்ளது. கடந்த 663 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்தவித மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது இந்த விலை குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 ஆக இருந்தது. விலைக் குறைப்பை அடுத்து, இது ரூ.92.24 ஆக குறைந்துள்ளது. இதேபோல, ரூ.102.63-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரூ.100 என்ற அளவில் குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT