Published : 14 Mar 2024 02:51 PM
Last Updated : 14 Mar 2024 02:51 PM

டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம்

ராம்லீலாவில் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கைளை எதிர்ப்பதாக கூறி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்த ‘கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து’ நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

விவசாய அமைப்புகள் இன்று டெல்லியில் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று டெல்லியில் கூடினர். கடந்த 2020-21-ல் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராட்டத்தை நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது. இந்த நிகழ்வின்போது மத்திய அரசினை எதிர்த்து விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த மகாபஞ்சாயத்துக்காக டெல்லிக்கு புதன்கிழமை இரவு வந்து சேர்ந்த பஞ்சாப்பின் பாட்டியாலாவைச் சேர்ந்த விவசாயியான ஹர்மான் சிங் கூறுகையில், "மத்திய அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதேபோல் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

பஞ்சாப்பின் பதின்டாவில் இருந்து வந்திருந்த விவசாயி ரவிந்தர சிங் கூறுகையில், "லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது தனது காரை ஏற்றயவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமும் அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்" என்றார்.

பாட்டியாலாவில் இருந்து வந்திருக்கும் பல்ஜீத் சிங், "நாங்கள் புதன்கிழமை இரவே டெல்லிக்கு வந்துவிட்டோம். இன்று காலையில் சிஸ் கஞ்சி சாஹிப் குருத்வாருக்குச் சென்றோம். இந்த நிகழ்வு முடிந்ததும் பங்கலா சாஹேப் குருத்வாருக்கு செல்வோம். அதன் பிறகு பஞ்சாப் செல்வோம்" என்றார்.

ராம்லீலா மைதானத்தில் விவாசாயிகள் ஒன்றுகூடுவதை முன்னிட்டு மத்திய டெல்லி வழியாக செல்லும் சாலைகளை தவிர்க்குமாறு டெல்லி போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர் என்றும், விவாசாயிகள் டிராக்டரில் டெல்லிக்குள் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதால், டெல்லி எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, 5,000 பேர் மட்டுமே கூடவேண்டும், டெல்லிக்குள் தங்களின் டிராக்டரில் வரக் கூடாது, மைதானத்தை நோக்கி பேரணியாக செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் விவசாயிகளுக்கு டெல்லி போலீஸார் அனுமதி வழங்கி இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x