Published : 14 Mar 2024 05:18 AM
Last Updated : 14 Mar 2024 05:18 AM

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை

கோப்புப்படம்

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த 11-ம் தேதி அமலுக்கு வந்தது. இதனிடையே, சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஆனால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் அதன் மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து தஞ்சமடைந்த அந்நாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக கருதப்படுகிறது.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 7-வது அட்டவணையின்படி ராணுவம், வெளியுறவு, வெளிநாட்டினர் உள்ளிட்ட 97 பிரிவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரம் 17-வது பிரிவின் கீழ் வருகிறது.

மேலும், சிஏஏ சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்தல் மற்றும் அதன் மீது இறுதிமுடிவு எடுத்தல் ஆகிய பணிகளை முறையே மாவட்ட மற்றும் மாநிலஅல்லது யூனியன் பிரதேச அளவிலான குழுக்கள் மேற்கொள்ளும் என சிஏஏ விதிகள் 2024-ல் கூறப்பட்டுள்ளன. இவ்விரு குழுக்களிலும் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக மத்திய அரசு அதிகாரிகள் இருப்பார்கள் என்றும் 2 அழைப்பாளர்களில் ஒருவர் மட்டும் மாநில அரசை சேர்ந்தவர் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறுவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அளவிலான குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு இயக்குநர் இருப்பார். உளவுத்துறை அதிகாரி, வெளிநாட்டினருக்கான மண்டல பதிவு அதிகாரி, மாநில தகவல் அதிகாரி மற்றும் மாநில அஞ்சல் துறை அதிகாரி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதில் 2 பேர் அழைப்பாளர்களாக இருப்பார்கள். இதில் ஒருவர் மட்டும் மாநில அரசின் முதன்மை செயலாளர் (உள் துறை) அல்லது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரி இடம்பெறுவார். மற்றொருவர் ரயில்வே அதிகாரியாக (மண்டல மேலாளர்) இருப்பார்.

இதுபோல மாவட்ட அளவிலான குழுவின் தலைவராக அஞ்சல் துறைமூத்த கண்காணிப்பாளர் அல்லது கண்காணிப்பாளர் இருப்பார். மாநில தகவல் அதிகாரி உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாநில அரசு சார்பில் வட்டாட்சியர் அந்தஸ்து அதிகாரியும் மத்திய அரசு சார்பில் ரயில்வே அதிகாரியும் (நிலைய அதிகாரி) அழைப்பாளர்களாக இருப்பார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இரு குழுக்களிலும் தலைவர் உட்படமொத்தம் 2 பேர் மட்டுமே இறுதிமுடிவு எடுக்க முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், மாநிலஅரசு பிரதிநிதியின் ஒப்புதல் இல்லாமலேயே இக்குழு விண்ணப்ப பரிசீலனை மற்றும் இறுதி முடிவு எடுத்தல் பணிகளை முடித்துவிட முடியும்.

சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

சிஏஏ சட்டத்தின்படி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியகுடியுரிமைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்னஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x