Published : 13 Mar 2024 08:28 PM
Last Updated : 13 Mar 2024 08:28 PM
புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் 72 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 72 தொகுதிகளுக்கான 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 20, குஜராத்தில் 7, ஹாியாணா மற்றும் தெலங்கானாவில் தலா 6 பேர் மற்றும் மத்தியப் பிரதேசம், இமாச்சல், திரிபுரா, தாத்ரா நாகர்ஹவேலி உள்ளிட்ட 72 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஹரியாணா முதல்வர் பதவியில் இருந்து விலகிய மனோகர் லால் கட்டாருக்கு அம்மாநிலத்தின் கர்ணல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரது பெயர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர்களான திரிவேந்தர் சிங் ராவத் மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் இம்முறை மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் களம் காணும் இருவருமே புதிய முகங்கள் ஆவர். கிழக்கு டெல்லியில் ஹர்ஷ் மல்ஹோத்ராவும், மேற்கு டெல்லியில் யோகேந்திர சந்தோலியாவும் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக இம்முறை 10 புதிய முகங்களுடன் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தர்வாத் தொகுதியில் இருந்தும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலிருந்து போட்டியிடுகின்றனர்.
பாஜக இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்குத் தொகுதியின் வேட்பாளராக களம் இறங்குகிறார். மைசூரில் இம்முறை யதுவீர் கிருஷ்ணதத்தா வதியாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை இத்தொகுதியில் பிரதாப் சிம்ஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலூனிக்கு உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சில முக்கிய வேட்பாளர்கள்:
முதல் பட்டியலைப் போலவே இந்த இரண்டாவது பட்டியலிலும் தமிழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு, பிஹார் மற்றும் ஒடிசாவில் நடந்து வரும் கூட்டணி பேச்சுவார்தைகளால் இந்த மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாஜக தனது 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை மார்ச் 2-ல் வெளியிட்டது. அதன்படி, பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வாராணசியில் போட்டியிடுகிறார். மேலும், இந்தப் பட்டியலில் மத்திய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 34 அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...