Last Updated : 13 Mar, 2024 12:18 PM

4  

Published : 13 Mar 2024 12:18 PM
Last Updated : 13 Mar 2024 12:18 PM

ராகுலின் அரசியல் எதிரி யார்? - வயநாடு தொகுதி வேட்பாளர் ஆனி ராஜா நேர்காணல்

வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதன் மூலம் தமது அரசியல் எதிரி யார் என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று வயநாடு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி, கேரளத்தின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வீத்தினார் ராகுல். வரப்போகும் மக்களவைத் தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக் கூடாது என தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாமல் வயநாட்டில் ராகுல் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார்.

வயநாட்டில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறாரே? - இது எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது. வயநாட்டில் யாரை வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தட்டும். அது அவர்களுடைய உரிமை. ஆனால் இண்டியா கூட்டணியின் முக்கிய அடையாளமாகத் திகழும் ராகுல் காந்தி, அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் இன்னொரு முக்கிய கட்சியின் தேசியத் தலைவரை எதிர்த்து போட்டியிடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்? அவருடையை பிரதான அரசியல் எதிரி பாஜகவா அல்லது கம்யூனிஸ்டுகளா என்ற கேள்வியைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

தனக்கு பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று ராகுல் காந்தி கருதுகிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும்? - ராகுல் காந்தி நிச்சயமாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும். எங்களுடைய விருப்பமும் அதுதான். அதற்காக வயநாட்டில்தான் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேறு எத்தனையோ வாய்ப்புகள் அவருக்கு உள்ளன. உதாரணத்துக்கு, தெலங்கானாவிலிருந்து ராகுல் போட்டியிட வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸார் கெஞ்சுகின்றனர்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி அவருக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதி. தாங்கள் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டால், அதனால் அம்மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிரான பேரெழுச்சியை காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்த முடியும்.

இந்த இடங்களில் எல்லாம்பாஜக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். மாறாக,பாஜகவுக்கு எந்த செல்வாக்கும் இல்லாத கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதன் மூலம் தமது பிரதான அரசியல் எதிரி யார் என்பதில் மக்களிடையே காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

வயநாடு தொகுதியின் தற்போதைய எம்.பி. என்ற முறையில் ராகுலின் செயல்பாடு பற்றி என்ன சொல்கிறீர்கள்? - இது பற்றி வயநாடு தொகுதி வாக்காளர்கள்தான் மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் கடந்த 10 நாட்களாக பிரச்சாரத்துக்கு செல்லும் என்னிடம் வயநாடு தொகுதி எங்கும் வாக்களர்கள் 2 கேள்விகளைத்தான் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்.

வயநாட்டில் வெற்றி பெற்றால் தொகுதிக்குள் இருந்து எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பீர்களா அல்லது அடுத்த தேர்தலுக்குதான் இங்கு வருவீர்களா என்பது முதல் கேள்வி. வன விலங்குகளின் தொடர்ச்சியான தாக்குதலால் முடங்கிப் போயுள்ள வயநாடு மக்களின் வாழ்க்கையை மீட்க உங்களிடம் என்ன திட்டம் உள்ளது என்பது 2-வது கேள்வி. மக்கள் கேட்கும் இந்த கேள்விகள்தான் உங்கள் கேள்விக்கான எனது பதில்.

வயநாட்டில் எதனை முன்னிலைப்படுத்தி நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள்? - மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராகவே கேரள மக்கள் வாக்களிப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தக் கூடிய வேட்பாளர் வேண்டும் என்று வயநாடு வாக்காளர்கள் விரும்புகின்றனர். உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவே நான் பிரச்சாரம் செய்கிறேன்.

உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? - பத்தாண்டு காலமாக பாஜகவின் பாசிச ஆட்சியை அப்புறப்படுத்த இடதுசாரிகள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த அங்கு இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை கேரள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் இடது ஜனநாயக முன்னணி போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குறிப்பாக, உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தக் கூடியவர்கள்தான் தங்களுக்கு தேவை என வயநாடு மக்கள் எதிர்பார்ப்பதால் இங்கு என்னுடைய வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

ராகுல் காந்தி - ஆனி ராஜா நேரடி போட்டி கேரளத்தில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்கிறார்களே? - எங்களுடைய இந்த நேரடி போட்டியால் கேரளத்தில் பாஜவுக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. ஆனால் இது பற்றி நாட்டின் பிற மாநிலங்களில் பிரதமர் மோடி நிச்சயம் பிரச்சாரம் செய்வார். அவ்வாறு பிரச்சாரம் செய்தால், அதனால் ஏற்படும் அத்தனை விளைவுகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x