Published : 13 Mar 2024 11:56 AM
Last Updated : 13 Mar 2024 11:56 AM
ஆந்திர மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இங்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இம்முறை தேர்தலை சந்திக்கின்றன.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த 3 கட்சிகள் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டில் நேற்று முன்தினம் மதியம் தொடங்கியது.
பாஜக சார்பில் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா ஆகியோரும் ஜனசேனா சார்பில் அதன் தலைவர் பவன் கல்யாணும் இதில் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தை இரவு 9 மணி வரை நீடித்தது. அதன் பிறகு 3 கட்சியினரும் தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 17, பாஜக 6, ஜனசேனா 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இதுபோல் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலங்கு தேசம் 144, பாஜக 10, ஜனசேனா 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
திருப்பதி, நரசாபுரம், அரக்கு, விஜயநகரம், ராஜமுந்திரி, அனகாபல்லி ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. இதில் ராஜமுந்திரியில் ஆந்திர பாஜகதலைவரும், என்.டி.ராமாராவின் மகளுமான புரந்தேஸ்வரி போட்டியிட உள்ளார். நரசாபுரத்தில், ரகுராமகிருஷ்ணம்ம ராஜு போட்டியிட உள்ளார். மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக சிலகலூரு பேட்டையில் வரும் 17-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இதில் மோடி பங்கேற்க இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT