Published : 13 Mar 2024 09:56 AM
Last Updated : 13 Mar 2024 09:56 AM

சிஏஏ அமலுக்கு எதிராக செயல்படுவது மாநில அரசுகளால் சாத்தியமா? - ஒரு தெளிவுப் பார்வை

புதுடெல்லி: ”மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்திருந்தார். அதேபோல் கேரளா, மேற்குவங்க அரசுகளும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், குடியுரிமை வழங்குதல் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் இதில் மாநில அரசின் நிலைப்பாடு என எதுவும் இருக்க முடியாது. மாநில அரசுகள் இதனை அமலாகவிடாமல் தடுக்கவும் முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் பகிர்ந்த விவரங்களின் சாராம்சம் பின்வருமாறு: கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி, https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளம் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் வாயிலாகவே அனைத்து விண்ணப்பங்களும் பெறப்படும். இதை பரிசீலனை செய்ய உளவுத் துறை, அஞ்சல் துறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதால் சிஏஏ-வை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் தனியாக நிலைப்பாடு கொள்ள இயலாது என்று அந்த அதிகாரி தெரிவிக்கிறார்.

எப்படி விண்ணப்பிப்பது? https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். சிஏஏ சட்டத்தின் பிரிவு 6B-ன் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதேபோல் பல்வேறு ஆவணங்களை குறிப்பிட்ட வடிவத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதும் அவசியமாக இருக்கிறது. பிரமாணப் பத்திரத்துடன், தகுதிச் சான்றும் அளிக்க வேண்டும்.

இவ்வாறாக இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்களை அஞ்சல்துறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். விண்ணப்பதாரர்களின் பின்னணி ஆய்வை உளவுத் துறை (ஐபி) மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சக அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் விண்ணப்பங்கள் மீதான இறுதி முடிவானது சென்சஸ் நடைமுறைகள் இயக்குநர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் சார்பில் எட்டப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்காக பரிசீலனைக் குழுவில் உளவுத் துறை, அஞ்சல் துறை ஜெனரல், மாநில அல்லது தேசிய தகவல் மையத்தின் அதிகாரி, மாநில உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி, ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோர் இடம் பெறுவர்.

மாவட்ட அளவிலான குழு ஒன்றும் இயங்கும். அதுதான் விண்ணப்பங்களில் தகுதியானவற்றை தரம் பிரிக்கும். இதற்கு அஞ்சல்துறை எஸ்பி தலைமை வகிப்பார். கூடவே தாசில்தார் அல்லது அதற்கு இணையான அதிகாரி மாநில அரசின் பிரதிநிதியாக இருப்பார்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதோடு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மாவட்ட அளவிலான பரிசீலனை குழுவின் முன் நேரில் ஆஜராக வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு இமெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மாவட்ட குழுவின் முன் ஆஜராகும் தேதி, நேரம் தெரிவிக்கப்படும். அப்போது அவர்கள் பதிவேற்றம் செய்த அனைத்து ஆவணங்களின் அசல் பிரதிகளுடன் ஆஜராக வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் இதற்காக பணிக்கப்பட்ட அதிகாரி “Oath of Allegiance” விண்ணப்பதாரரை உறுதிமொழி ஏற்க வைத்து டிஜிட்டல் பிரதிகள் உயர்மட்ட குழுவுக்கு அனுப்பிவைப்பார். அந்தக் குழுவே இறுதி முடிவு எடுக்கும்.

எனவே, இத்தகைய நடைமுறைகளில் மாநில அரசுக்கு என தனி அதிகாரம் ஏதும் இருக்காது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குவியும் விண்ணப்பங்கள்: இதற்கிடையில், https://indiancitizenshiponline.nic.in என்ற இணையதளம் நேற்று தொடங்கிய பின்னர் அதில் அதிகமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், எத்தனை பேர் விண்ணப்பிக்கின்றனர் என்ற மொத்த எண்ணிக்கை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் ஏற்கப்பட்ட பின்னரே உறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி இந்து ஆங்கிலம் - விஜைதா சிங்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x