Published : 13 Mar 2024 06:01 AM
Last Updated : 13 Mar 2024 06:01 AM
ஜோத்பூர்: நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் ஜோத்பூரில் உள்ள இந்து அகதிகள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்து அகதிகள் ஏராளமானோர் ராஜஸ்தானின் மேற்கு மாவட்டங்களான பார்மர், பிகானேர் மற்றும் ஜோத்பூரில் வசிக்கின்றனர். இந்நிலையில் சிஏஏ நேற்று முன்தினம் அமலுக்கு வந்ததை வரவேற்று, ஜோத்பூர் இந்து அகதிகள்முகாமில் வசிப்பவர்கள் நேற்றுமுன்தினம் இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு வாயில்களில் விளக்கு ஏற்றியும் பட்டாசு வெடித்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இங்குள்ள அகதிகள் கூறும்போது, “இது எங்களுக்கு உண்மையான ராம ராஜ்ஜியம் போன்றது. சிஏஏ தற்போது நனவாகி விட்டது. இதற்காக நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தோம். அகதிகளாக பரிதவிக்கும் நாங்கள் சிறப்பான வாழ்க்கை வாழ இது உதவும். நீண்ட காலமாக குடியுரிமைக்காக காத்திருக்கும் பலருக்கு இது உதவியாக இருக்கும். அவர்கள் விரைவில் இந்திய குடிமக்களாக மாறுவார்கள் என நம்பலாம்” என்று தெரிவித்தனர்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அகதிகளின் நலனுக்காக சீமந்த் லோக் சங்கதன் என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஜோத்பூரில் சுமார் 35,000 இந்து அகதிகள் குடியுரிமைக்காக காத்திருப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்த அமைப்பு கூறுகிறது.
இந்த அமைப்பின் தலைவர் ஹிந்து சிங் சோதன் கூறும்போது, “சிஏஏ அமலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் 2014டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறமுடியும். இதன் பிறகு இந்தியா வந்தவர்களுக்கு பழையகுடியுரிமை சட்ட விதிகள் மட்டுமே பொருந்தும். இது அநீதியானது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் இந்தியா வந்துள்ளனர்” என்றார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அகதிகள் கூறும்போது, “பகவான் ராமரின் அவதாரமாக பிரதமர் நரேந்திர மோடியை கருதுகிறோம். எங்களுக்கு வாழ்வளித்த அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT