Last Updated : 15 Feb, 2018 08:09 AM

 

Published : 15 Feb 2018 08:09 AM
Last Updated : 15 Feb 2018 08:09 AM

எல்லா மதமும் உயர்ந்ததுதான்...

னது பக்கத்து வீட்டுக்காரர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் உறுதிமொழி எடுப்பார். அதை ஜனவரி முடிவதற்குள்ளேயே மீறி விடுவார். ஆண்டின் முதல் வாரத்தில் வழக்கமாக சந்திப்போம். இந்த ஆண்டு நான் மியான்மர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்ததால் பார்க்க முடியவில்லை. கடந்த வாரம்தான் சந்தித்தேன். “இந்த ஆண்டு என்ன உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள்..” என என் மனைவி அவரிடம் கேட்டாள். அரசியல் மற்றும் மதம் குறித்து அதிகம் கோபப்படக்கூடாது என உறுதிமொழி எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

பங்கஜ் மிஸ்ரா தனது ‘ஏஜ் ஆப் ஆங்கர்’ என்ற புத்தகத்தில், நாம் எப்போதுமே கோபத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எழுதியிருக்கிறார். தேசப்பற்றுடன் கூடிய அரசியல் இயக்கங்கள், இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தையும் இரண்டு பிரிவாகப் பிரித்து வைத்திருக்கின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு காரணமாக தொடர் கலவரங்களையும் தேசியவாதத்தின் நச்சு வடிவங்களையும் பார்த்து வருகிறோம். வலதுசாரிகள்தான் கோபமாக இருக்கிறார்கள் என்றால், இடதுசாரிகள் பைத்தியமாக இருக்கிறார்கள். வலதுசாரிகளின் வன்முறைக்கு சமமாக இடதுசாரிகளின் அகந்தை இருக்கிறது. சகிப்புத்தன்மை என்ற பெயரில் மாறுபட்ட கொள்கை உடையவர்களிடம் வெறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். இரு தரப்பிடமும் தவறு இருக்கிறது. 2018-ம் ஆண்டில் இந்த வேற்றுமையைக் களைந்து சமூக ஊடகங்களில் பொறுப்பான விவாதத்துக்கு வழி ஏற்படுத்தி நமது வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வர பிரதமர் மோடி உறுதியேற்க வேண்டும்.

இந்தியாவை இரண்டாகப் பிரிப்பதாக மோடி மீது அறிவுஜீவிகள் ஆத்திரமாக இருக்கிறார்கள். மோடியின் 2014 தேர்தல் வெற்றியை இன்னமும் ஜீரணிக்க முடியாத இடதுசாரிகள், 2019-ம் ஆண்டிலும் மாற்று இல்லையே என்ற மன உளைச்சலில் இருக்கிறார்கள். இந்துக்களின் அடையாளங்களை அறிவுஜீவிகள் கேலி செய்வதால் அவர்களும் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள். இந்துத்துவா முழக்கங்களால் முஸ்லிம்களும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நினைக்கிறார்கள். பாஜகவின் மேல்தட்டு தலைவர்களின் பாரபட்சத்தால் தலித் மக்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் தாங்கள் இழிவுபடுத்தப்படுவதாக நினைக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளால் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை விடவும் இந்தியா மிகவும் பின்தங்கி இருப்பதாக நடுத்தர மக்கள் கோபமாக இருக்கிறார்கள். மோடி வாக்குறுதி அளித்த வேலைவாய்ப்பும் நல்ல காலமும் வரவில்லை என ஏழைகள் கோபமாக இருக்கிறார்கள். இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் குஜராத்தில் படேல்களும் ஹரியாணாவில் ஜாட் மக்களும் ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் ஆந்திராவில் காப்பு மக்களும் அசாமில் அஹோம் பிரிவினரும் நடத்திய போராட்டங்கள்.

கோபம் வரும்போது அது போகும்வரை சிரிப்பதுதான் சரியான வழி அல்லது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற மன்னிப்பின் மகத்துவத்தை உணர்த்திய தலைவர்களைத் தேடிப் பெற வேண்டும்.

அரசியல் மீதான கோபத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும்? “மன்னிப்பும் சகிப்புத்தன்மையும்தான் அதற்கு விடை..” என்கிறார் மகாபாரதத்தில் தருமர். பகடை விளையாட்டில் மோசடி செய்து தனது அரசைப் பறித்த துரியோதனனை தருமர் மன்னித்தார். “படையைத் திரட்டி அரியணையை மீட்க வேண்டும்” என திரெளபதி கூறியபோது, வனவாசம் போவதாக வாக்குக் கொடுத்துவிட்டேன் என்கிறார் தருமர். அதேபோல், போர் முடிந்தபிறகு, திருதராஷ்டிரனை மன்னித்த தருமர், அவரையே அரியணையில் அமரச் செய்து, அவர் பெயராலேயே ஆட்சி செய்தார். 500 ஆண்டுகளுக்கு முந்தைய மகாபாரதத்தில் தருமரின் குணம், புத்த மதத்தின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்த பேரரசர் அசோகரைப் பார்த்து வந்திருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள். ஆனால், “மன்னிப்பது ஆட்சியாளர்களின் வேலை அல்ல, நீதி வழங்குவதே..” என தருமருக்குச் சொல்கிறார் பீஷ்மர்.

மதம் என்பது இருமுனையும் கூர்மையான வாள். ஒரு பக்கம் குழப்பமான மக்களின் வாழ்க்கைக்கு வழி காட்டினாலும் அது தனி அடையாளத்தை ஏற்படுத்தி, அதுவே பிரச்சினைக்கும் காரணமாகி விடுகிறது. மேலை நாடுகளில் பல நூற்றாண்டு வலியுறுத்தல்களுக்குப் பிறகே அரசியலில் இருந்து மதத்தை நீக்க முன்வந்தனர் அரசியல்வாதிகள். இஸ்லாமிய சமூகம் இன்னமும் இந்தப் பிரச்சினையில்தான் சிக்கித் தவிக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் போதிருந்தே, மகாத்மா காந்தி உருவாக்கிய சகிப்புத்தன்மை இந்தியாவில் இருந்திருக்கிறது. யாரும் இந்தியா, ‘இந்து பாகிஸ்தான்’ ஆவதை விரும்பவில்லை என்பதைப் பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

அரசியலில் மதம் நுழையும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. அசோகரும் காந்தியும் அடுத்தவரின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும் என போதித்தார்கள். மதச்சார்பற்றவர்களும் மதங்களைப் பின்பற்றும் மக்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். மோடியும் வகுப்புவாத வன்முறைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது, இந்து, முஸ்லிம் அடிப்படைவாதிகள் வேலையில் மூழ்கி விடுவார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்குப் போக எழுந்தபோது, “கோபத்தை அடக்க பவுத்த நாடான மியான்மரிடம் இருந்து என்ன பாடத்தை இந்தியா கற்கலாம்..” என மனைவியிடம் கேட்டார். “அவர்களும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கோபமாகத்தான் இருக்கிறார்கள்.. இருந்தாலும் புத்தர் கூறியதுபோல, அந்த கோபத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள், அந்த கோபத்தாலேயே தண்டிக்கப்படுவார்கள்..” என்றாள் என் மனைவி.

தொடர்புக்கு: gurcharandas@gmail.com

தமிழில்: எஸ். ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x