Published : 12 Mar 2024 12:13 PM
Last Updated : 12 Mar 2024 12:13 PM
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையும் அடங்கும். மேலும், பல்வேறு ரயில்வே சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரயில்வே உள்கட்டமைப்பு, தொடர்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையை ஊக்கப்படுத்தும் வகையில், அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, ரூ.1,06,000 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.
ரயில்வே பணிமனைகள், லோகோ ஷெட்கள், பிட் லைன் மற்றும் கோச்சிங் டிப்போக்கள், பல்தான் - பாராமதி இடையேயான புதிய பாதை, எலக்ட்ரிக் தொடர்பு சிஸ்டத்தை புதுப்பிக்கும் பணிகள் போன்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், கிழக்கு டிஎஃப்சி-யின் புதிய குர்ஜாவிலிருந்து சாஹ்னேவவால் (401 கி.மீ.) பிரிவு மற்றும், மேற்கு டிஎஃப்சியின் மகர்புராவிலிருந்து புதிய கோல்வாட் பகுதி (244 கி.மீ.) ஆகிய இரண்டு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தங்களை (டிஎஃப்சி) புதிய பிரிவுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதேபோல், அகமதாபாத் - மும்பை சென்ட்ரல், செகந்திராபாத் - விசாகப்பட்டினம், மைசூரூ - டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரஸ் (சென்னை), பாட்னா - லக்னோ, நியூ ஜல்பைகுரி - பாட்னா, பூரி - விசாகப்பட்டினம், லக்னோ - டேராடூன், கலாபுரகி - ஸ்ரீ எம் விஸ்வேஸ்வரையா முனையம்- பெங்களூரு, ராஞ்சி - வாரணாசி, கஜுராகோ - டெல்லி (நிஜாமுதீன்) ஆகிய பத்து புதிய வந்தே பாரத் விரைவு ரயில்களை கொடியசைத்து தொங்கி வைத்தார்.
அகமதாபாத் - ஜாம்நகரிலிந்து தவர்கா வரையிலும், அஜ்மீர் - டெல்லி சராய் ரோஹில்லாவிலிருந்து சண்டிகர் வரையிலும், கோரக்பூர் - லக்னோவிலிருந்து பிரயாக்ராஜ் வரையிலும் மற்றும் திருவனந்தபுரம் - காசர்கோட்டிலிருந்து மங்களூரு வரையிலும் நீட்டிக்கப்பட்ட நான்கு வந்தேபாரத் ரயில்களையும், இரண்டு பயணிகள் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து வத்தார்.
மேலும் பிரதமர் மோடி, ரயில்வே நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள 50 பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி மருந்தகங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மருந்தகங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குகின்றன. அதேபோல் 51 கதி சக்தி மல்டி மாடல் சரக்கு முனையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் 80 பிரிவுகளில் 1045 கி.மீ., தூரத்துக்கான தானியங்கி சிக்னல்களையும், 2, 646 ரயில்வே நிலையங்களில் டிஜிட்டல் கட்டுப்பாட்டினையும், 35 ரயில் கோச் உணவகங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உள்ளூர் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலான 1,500 ’ஒரு ரயில் நிலையம், ஒரு பொருள்’ என்ற கடைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் 975 பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தியில் இயங்கும் நிலையங்கள், கட்டிடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த முன்மாதிரியான முயற்சி இந்தியாவின் மாற்று எரிசக்தி பயன்பாட்டு முயற்சிக்கு பங்களிப்பதுடன், ரயில்வேயின் கார்பன் பயன்பாட்டை குறைக்கும்.
குஜராதின் தஹ்ஜ்-ல் ரூ.20,600 கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் காம்பளக்ஸுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான எக்டா மால்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT