Published : 12 Mar 2024 05:32 AM
Last Updated : 12 Mar 2024 05:32 AM
புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்தார்.
மூன்று ஆணையர்களை கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார். தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த சனிக்கிழமை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் 2 ஆணையர் பதவிகள் காலியாக உள்ளன.
இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டுமார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவின்படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்,இந்திய தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது மனுவில், “மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், புதிய தேர்தல் ஆணையர்களை உடனடியாக நியமிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர் நியமன நடைமுறை தொடர்பாக அனூப் பரன்வால் – மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு, மார்ச் 2-ம் தேதி தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.அந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை உடனே நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள 2 ஆணையர் பதவிகளும் மார்ச் 15-ம் தேதிக்குள் நிரப்பப்படலாம் என தகவல் வெளியான நிலையில் ஜெயா தாக்குர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையில் உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் விவகார அமைச்சகத்தின் கேபினட் செயலாளர்களை கொண்ட தேடல் குழு, இரண்டு பதவிகளுக்கும் தலா 5 பெயர்கள் கொண்ட இரண்டு தனித்தனி பட்டியல்ளை தயார் செய்யவுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறாத வகையில் மத்திய அரசு இயற்றிய புதிய சட்டம் அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT