Published : 12 Mar 2024 04:36 AM
Last Updated : 12 Mar 2024 04:36 AM

தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் தரவேண்டும்: எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நாள் கெடு

கோப்புப்படம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரைஅவகாசம் வழங்க கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவரங்களை இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு நாள் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. கடந்த 2019 முதல் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.

‘இந்த தகவல்களை திரட்டி, வகைப்படுத்தி தருவது சிக்கலான நடவடிக்கை. இதற்கு, ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிஉச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ சார்பில் மார்ச் 4-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே, கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த மனு,தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தலைமை நீதிபதி கூறியதாவது:

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு கடந்த பிப்ரவரி 15-ம் தேதிஉத்தரவிட்டோம். கடந்த 26 நாட்களாக எஸ்பிஐ அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். அதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

பல்வேறு கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டபோதிலும் அதுதொடர்பான அனைத்து தகவல்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதில் இருந்து தகவல்களை தொகுத்து தருவது சுலபமான காரியம்தான்.

ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் உள்ள சில ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். நாங்கள் கேட்ட விவரங்களை வழங்குவது எஸ்பிஐ போன்ற மிகப்பெரிய வங்கிக்கு கடினமான வேலை அல்ல.இதற்கு முன்பும் இதுபோன்ற பணிகளை எஸ்பிஐ குறித்த நேரத்தில் நிறைவேற்றியுள்ளது. அப்படி இருக்க, தேர்தல் பத்திர விவகாரத்தில் அவகாசம் கோருவது ஏன்?

எஸ்பிஐ வங்கியிடம் நேர்மையான செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தற்போது வெளியிட வேண்டியது அவசியம். எங்கும் இணையமயமாகிவிட்ட இந்த சூழலில் தகவலை திரட்டுவது முடியாத காரியமும் அல்ல.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒரு வங்கி அதிகாரி மேல்முறையீடு செய்வது மிகவும் தீவிரமான விஷயம், கண்டனத்துக்குரியது.

எனவே, எஸ்பிஐ விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவகாசம்கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நிதி தொடர்பான அனைத்து விவரங்களையும் மார்ச் 12-ம் தேதி (இன்று) மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பிக்க வேண்டும்.

அதை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும். விவரங்களை கொடுக்க தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தலைமை நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x