Published : 11 Mar 2024 05:10 PM
Last Updated : 11 Mar 2024 05:10 PM

கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸுக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறதா? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உணவு சமைக்க இயலவில்லையா ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடலாம், எங்கேனும் பயணிக்க வேண்டுமா கேப் புக் பண்ணிக் கொள்ளலாம். இவை அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளாகிவிட்டன. ஆனால், நாம் விரும்பியதை கொண்டுவந்து சேர்க்கும் டெலிவரி பாய்ஸுக்கும், பயண இலக்கில் கொண்டு சேர்க்கும் கேப் டிரைவர்களுக்கும் இந்தியாவில் சமூகப் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? அவர்களின் பணி ஒழுங்குமுறைகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி ஓர் ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, செயலிகள் மூலமாக வாடகைக் கார் ஓட்டும் ஓட்டுநர்களில் மூன்றில் ஒரு சதவீதம் பேர் சராசரியாக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பணி புரிகின்றனர். 83 சதவீதத்துக்கும் மேலானோர் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கு மேலாகவும், 60 சதவீதத்துக்கும் மேலானோர் சராசரியாக ஒரு நாளில் 12 மணி நேரத்துக்கும் மேலாகவும் பணி செய்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. 10,000-க்கும் வாடகை கார் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிய வந்துள்ளன.

சமூக ஏற்றத்தாழ்வுகள் இந்த நிலைமையை இன்னும் மோசமடையச் செய்கின்றன என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்த கேப் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 14 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்கின்றனர். அதேவேளையில் பிற வகுப்பைச் சேர்ந்தவர்களில் வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே இவ்வாறாக அதிக நேரம் வேலை செய்கின்றனர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

People's Association in Grassroots Action and Movements மற்றும் Indian Federation of App based Transport Workers இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகமும், ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றும் உதவி செய்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையை எழுதிய அறிஞர்கள், இதுபோன்ற செயலிகள் மூலம் வேலை ஏவப்படும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அரசாங்கம் இத்தகைய செயலிகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் நியாயமானவையாக இருக்கின்றனவா என மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

மேலும், தங்கள் ஆய்வறிக்கையின்படி இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 43 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு ரூ.500-க்கும் கீழாகவே சம்பாதிக்கின்றனர் அல்லது மாதம் ரூ.15 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர். அதேபோல் செயலி மூலம் இயங்கும் டெலிவரி பாய்ஸ் மாத சராசரியாக ரூ.10,000 மட்டுமே சம்பாதிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், இவர்களில் 70 சதவீதத்துக்கும் மேலானோர் 10 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்கின்றனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

அதுமட்டுமல்லாது பல்வேறு சாதியப் பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் நிலவும் வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது இத்தகைய ஊதிய பேதம் ஏற்கெனவே நிலவும் சமூகப் பாகுபாடுகளை மேலும் ஆழப்படுத்தி வறுமையையும், அழுத்தத்தையும் அச்சமூகங்கள் மீது திணிக்கிறது என ஆய்வறிக்கை கூறுகின்றது.

இந்த ஆய்வில் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, லக்னோ, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூர் ஆகிய 8 நகரங்களில் 5302 கேப் ஓட்டுநர்களும், 5028 டெலிவரி பாய்ஸும் கலந்து கொண்டனர். 50 கேள்விகள் இவர்களிடம் கேட்கப்பட்டது. இவர்களில் 78 சதவீதம் பேர் 21 வயது முதல் 40 வயது வரையிலானவர்களாக இருந்தனர்.

அதிகமான நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளதால் கேப் ஓட்டுநர்கள் உடல் ரீதியாக சோர்வடைகின்றனர். மேலும், பல உணவகங்கள் 10 நிமிடங்களில் டெலிவரி என்ற திட்டத்தை வைத்துள்ளதால் அதனை மேற்கொள்ளும் டெலிவரி பாய்ஸுக்கு விபத்து ஆபத்து நிறையவே இருக்கின்றது என ஆய்வறிக்கை கூறுகின்றது. எனவே, கேப் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்ஸுக்கான சமூகப் பாதிகாப்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x