Published : 11 Mar 2024 03:27 PM
Last Updated : 11 Mar 2024 03:27 PM

நிறமூட்டிகளுடன் கூடிய கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்க்கு கர்நாடகாவில் தடை

பிரதிநிதித்துவப் படம்

பெங்களூரு: அண்மையில் புதுச்சேரியிலும், தொடர்ந்து தமிழகத்திலும் ரோடமைன் B நிறமூட்டிகள் பயன்படுத்தி பஞ்சுமிட்டாய் தயாரிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கர்நாடகாவிலும் இந்த செயற்கை நிறமூட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இதற்கான அறிவிப்பை இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார்.

பலரும் விரும்பி உண்ணும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களில் நிறமூட்டியான ரோடமைன் பி செயற்கை நிறமூட்டியைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்த அமைச்சர், மீறினால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரோடமைன் பி போன்ற செயற்கை நிறமூட்டிகளால் தென் மாநிலங்களில் பரவலாக பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புக்கு மக்கள் உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. இதனையொட்டி கர்நாடகா முழுவதும் 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் 64 மாதிரிகள் பாதுகாப்பானவையாக இருந்தன. எஞ்சிய 106 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதேபோல் சேகரிக்கப்பட்ட 25 பஞ்சுமிட்டாய் மாதிரிகளில் 15 பாதுகாப்பற்றவையாக இருந்தன.

இந்த பாதுகாப்பற்ற மாதிரிகளில் டார்ட்ராசைன் (Tartrazine), கார்மோஸைன் (Carmoisine), சன்செட் யெல்லோ (Sunset Yellow ), ரோடமைன்-1B (Rhodamine-1B )போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளை பெரிய உணவகங்கள் தொடங்கி சாலையோர கடைகள் வரை பல இடங்களில் இருந்து சேகரித்தோம். இவற்றில் சில மாதிரிகள் கர்நாடகாவின் 3 முக்கிய நட்சத்திர உணவகங்களில் இருந்து பெறப்பட்டவை. அனைத்திலும் ஆபத்தான ரோடமைன் பி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரோடமைன் உபயோகிக்கும் உணவுகள் அடர் சிவப்பில் காட்சியளிக்கும். இதற்காகவே இந்த நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவர் உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதனால் ரோடமைன் பி செயற்கை நிறமூட்டி பயன்பாடு தடை செய்யப்படுகிறது. மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர், ரோடமைன் பி பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது” என்றார்.

ஏன் ஆபத்து? - இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும். இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x