Published : 11 Mar 2024 02:37 PM
Last Updated : 11 Mar 2024 02:37 PM
கொச்சி: திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் சுரேஷ் கோபி, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆவேசமாகப் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகன் கே.முரளிதரன், சிபிஐ சார்பில் சுனில் குமார் என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கி இருப்பதால் திருச்சூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதற்கிடையே, பாஜக நிர்வாகிகளிடம் சுரேஷ் கோபி டென்ஷன் ஆன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருச்சூர் சாஸ்தாம்பூ காலனியில் சுரேஷ் கோபி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை அடுத்து நிர்வாகிகளிடம் கோபமாக அவர் நடந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறி புறப்படும் முன் பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசிய சுரேஷ் கோபி, “பூத் கமிட்டி நிர்வாகிகளின் வேலை என்ன? வாக்காளர்களை சேர்க்காமல் இருக்கும் கூட்டத்துக்கு எதற்காக என்னை அழைத்தீர்கள்? எனக்காக ஓட்டு வாங்கித் தருவதற்காக நீங்கள் என்னை அழைத்தீர்கள் என்றால், வாக்களிக்கும் மக்கள் இங்கு இருந்திருக்க வேண்டுமே.
பூத் நிர்வாகிகளுக்கு என்ன கடமை? எனக்கு நீங்கள் ஓட்டு வாங்கித் தர வேண்டும். எனக்காக வாக்காளர்களிடம் நீங்கள் சென்று பேச வேண்டும். நாம் யுத்தத்துக்கு செல்லவில்லை. மக்களுக்கான ஆதாயத்தை ஏற்படுத்திக்கொடுக்கத்தான் களமிறங்கி உள்ளோம் என்பதை பூத் கமிட்டி நிர்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்கு நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், வேலை செய்யாமல் இருந்தால் நான் நாளை திருவனந்தபுரத்துக்கு சென்று விடுவேன். திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளரான ராஜிவ் சந்திரசேகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். இங்கு போட்டியிட வேண்டும் என எனக்கு எந்த விருப்பமும் இல்லை. நான் இன்னும் நாமினேஷன் தாக்கல் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கோபமாகப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT