Published : 11 Mar 2024 12:05 PM
Last Updated : 11 Mar 2024 12:05 PM
புதுடெல்லி: காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். அடுத்தடுத்த ராஜினாமாக்கள் தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாகவுள்ளது.
காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு ஆலோசனை நடத்தி, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வரும் 15-ம் தேதி டெல்லியில் கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) சட்டம், 2023ன் கீழ் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஜெயா தாகூர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய சட்டம் சொல்வது என்ன?: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருப்பார். ஆனால், இந்தக் குழுவில் தற்போதைய மத்திய அரசு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் சட்டவிதியில் திருத்தம் கொண்டுவந்தது. புதிய சட்டத்தின்படி, பிரதமராக இருப்பவர், அவரால் நியமிக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழுவே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க முடியும்.
அந்த வகையில் பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மார்ச் 15ம் தேதி தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த குழு எந்த தேர்தல் ஆணையர்களையும் தேர்ந்தெடுத்ததில்லை. அருண் கோயல் ராஜினாமாவை தொடர்ந்து காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக முதல்முறையாக இந்தக் குழு ஆலோசிக்க இருக்கிறது.
இந்த சூழலில்தான் இந்த புதிய சட்டங்களை கொண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயா தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். அந்த வழக்கில் பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT