Published : 11 Feb 2018 07:01 AM
Last Updated : 11 Feb 2018 07:01 AM

திருப்பதி தேவஸ்தானத்துக்கு எதிராக குவியும் பொதுநல வழக்குகள்: வழக்கு செலவுக்காக பக்தர்களின் பணம் வீணாவதாகக் குற்றச்சாட்டு

திருப்பதி தேவஸ்தானத்துக்கு எதிராக பொதுநல வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

திருப்பதி அடுத்துள்ள தும்மல குண்டாவில் தனியார் சார்பில் கட்டப்பட்ட கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும், திருமலை அர்ச்சகர் ஒருவரை அனுப்பி அந்த கோயிலில் திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் சேவைகளை போன்றே நடத்த உத்தரவு பிறப்பித்தது. தேவஸ்தானத்தின் கீழ் இயங்காத ஒரு கோயிலுக்கு எப்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிதி ஒதுக்கீடு செய்யலாம் என எம். கோபால்ரெட்டி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் அனகாபல்லியில் உள்ள ஒரு கோயில் வளர்ச்சி பணிக்கு ரூ. 5 கோடி நிதி வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மீண்டும் எம். கோபால் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதற்கும் நீதிமன் றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2016-ம் ஆண்டு திருப்பதியில் உள்ள ஏரிகளை அழகுபடுத்த தேவஸ்தானம் நிதி வழங்க வேண்டுமென இந்து சமய அற நிலையத்துறை மேலதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தேவஸ்தானத்திற்கு தொடர்பில்லாத திட்டங்களுக்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்கிறீர்கள் என நீதிமன்றம் இதற்கும் தடை விதித்தது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில், ரேணிகுண்டா-கல்லூரு இடையே தேசிய நெடுஞ்சாலையை அழகுபடுத்துவதற்காக தேவஸ்தானம் ரூ. 10 கோடியை திருப்பதி நகர வளர்ச்சி கழகத்திற்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. தேசிய நெடுஞ்சாலையில் அழகுபடுத்துவது என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதால், இதற்காக தேவஸ்தானம் ஏன் நிதி வழங்க வேண்டுமென நவீன் குமார் ரெட்டி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நிதி வழங்குவதற்கு தடை விதித்தது.

எச்.டி.பி.டி. எனும் அறக்கட்டளைக்கு தேவஸ்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ. 12 கோடி வழங்க முன்வந்தது. மீண்டும் நவீன் குமார் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன்பின் நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான மருத்துவமனைக்கு (சிம்ஸ்) மருந்துகள் வாங்குவதில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதையும் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தேவஸ்தான அதிகாரிகளின் செயல்களால், வழக்குச் செலவுகளுக்கு பக்தர்களின் பணம் கோடிக்கணக்கில் வீணாவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x