Published : 10 Mar 2024 07:57 PM
Last Updated : 10 Mar 2024 07:57 PM
பெங்களூரு: மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்ததும் காங்கிரஸின் இந்து விரோத மாற்றங்களை நீக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கார்நாடக பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் சித்தாபூரில் நடந்த கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முழக்கமான "அப்ரி பார் 400 பர்" முழக்கத்தை விளக்கிப் பேசும் போது அனந்த்குமார் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், "தேவையற்ற சில விஷயங்களை நீக்க, குறிப்பாக இந்துச் சமூகத்தை அடிபணியச் செய்ய காங்கிரஸ் அரசு புகுத்தியுள்ள இந்துவிரோத விஷயங்களை நீக்க அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவை அனைத்தையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் செய்யமுடியாது" இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சர்ச்சை பேச்சுக்கு பதில் அளித்துள்ள மாநிலத்தின் ஆளுங்கட்சியான காங்கிரஸ், அரசியலமைப்பை மாற்றுவது பாஜகவுக்கு தேர்தல் பிரச்சினையா என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், "ஒரு காலத்தில் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பேசிய எம்.பி., இப்போது அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகிறாரா? பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பின் கீழ் பாஜக தலைவர்களால் வாழமுடியவில்லையா" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கர்நாடகாவில் இந்து கோயில்களின் மீது கட்டப்பட்டுள்ள மசூதிகளை இடிக்க வேண்டும் என்று அனந்த குமார் ஹெக்டே அழைப்பு விடுத்திருந்தார். கடந்த 2019ம் ஆண்டு, ஒரு முஸ்லிம் அப்பாவுக்கும் கிறிஸ்தவ தாய்க்கும் பிறந்த ராகுல் காந்தி தன்னை எவ்வாறு இந்து என சொல்லிக்கொள்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதே ஆண்டு இந்து பெண்களைத் தொடும் கைகள் உயிர்வாழக்கூடாது என்றும் எச்சரித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரான அனந்த குமார் ஹெக்டே, மகாத்மா காந்தி தலைமையிலான விடுதலை இயக்கம் ஒரு நாடகம் என்று கடந்த 2020ம் ஆண்டு தெரிவித்திருந்தார். அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று 2017-ல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT