Published : 10 Mar 2024 03:26 PM
Last Updated : 10 Mar 2024 03:26 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார்.
இண்டியா கூட்டணியின் அங்கமாக திரிணமூல் காங்கிரஸ் இருந்து வந்த நிலையில், மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி அறிவிப்பு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய மம்தா பானர்ஜி, முன்னதாக அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், பாரம்போர் தொகுதியிலும், கீர்த்தி ஆசாத் பர்தமான் துர்காபூர் தொகுதியிலும், சவுகதா ராய், டும் டும் தொகுதியிலும், சுதீப் பானர்ஜி கொல்கத்தா வடக்கு தொகுதியிலும், அபிஷேக் பானர்ஜி டையமண்ட் துறைமுகம் தொகுதியிலும், மஹூவா மொய்த்ரா கிருஷ்ணாநகர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
முதல்முறையாக பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துப் பேசிய மம்தா பானர்ஜி, "மக்களவைத் தேர்தலை திரிணமூல் காங்கிரஸ் தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது. அதேநேரத்தில், அஸ்ஸாம் மற்றம் மேகாலயாவிலும் கட்சி போட்டியிட இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்துக்கு எதிராக தவறான தகவல்களை பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்கம் குறித்து பேசுவதற்கு முன்பாக அவர் அதிகாரிகளிடம் தகவல்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் என்பது மக்களை திறந்தவெளி சிறையில் தள்ளுவதற்கானது. எனவே, மத்திய அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாய, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நீதித்துறையை நான் மதிக்கிறேன். ஆனால், சில நீதிபதிகள் பாஜகவின் ஏஜண்டுகள் போல செயல்படுகிறார்கள்" என தெரிவித்தார்.
மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT