Published : 10 Mar 2024 05:33 AM
Last Updated : 10 Mar 2024 05:33 AM
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் ராணுவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அசாமின் தேஜ்பூரில் ராணுவ பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அங்கிருந்து அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தவாங் பகுதியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஓராண்டில் 5 மாதங்கள் அந்தப் பகுதியில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும். இதற்கு தீர்வு காண அருணாச்சல பிரதேசத்தின் தவாங், மேற்கு காமெங் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சீன எல்லையை ஒட்டிய ‘சேலா பாஸ்' பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க கடந்த 2019 பிப்ரவரி 9-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அங்கு 13,000 அடி உயரத்தில் மலையைக் குடைந்து உலகின் மிக உயரமான இருவழி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு சுரங்கப் பாதையின் நீளம் 1,595 மீட்டர் ஆகும். மற்றொரு சுரங்கப் பாதையின் நீளம் 1,003 மீட்டர் ஆகும். இரு சுரங்கப் பாதைகளையும் இணைக்கும் வகையில் 1,200 மீட்டர் நீளமுடைய இணைப்பு சாலை, அவசர காலங்களில் வெளியேறுவதற்கான பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
எல்லை சாலைகள் அமைப்பு ரூ.825 கோடி செலவில் சுரங்கப் பாதையை கட்டி முடித்துள்ளது. ஒரு நாளில் சுரங்கப்பாதை வழியாக 3,000 கார்கள், 2,000 லாரிகள் கடந்து செல்ல முடியும். குறிப்பாக பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ வாகனங்களை சீன எல்லைப் பகுதிக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். அசாமின் தேஜ்பூர்- அருணாச்சல பிரதேசத்தின் தவாங் இடையிலான தொலைவு 10 கி.மீ. ஆகவும், பயண நேரம் ஒரு மணி வரையும் குறைந்திருக்கிறது. பனிப்பொழிவு காலங்களிலும் சீன எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களால் தடையின்றி செல்ல முடியும்.
ராணுவ பயன்பாடு மட்டுமன்றி சேலா சுரங்கப் பாதையில் உள்ளூர் மக்கள் பெரிதும் பயன் அடைவர். சுற்றுலா துறையும் வளர்ச்சி அடையும் என்று அருணாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச தலைநகர் இடா நகரில் நேற்று நடைபெற்ற விழாவின்போது சேலா சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
1962 போரில் 300 சீன வீரர்களை கொன்ற இரு பழங்குடி பெண்கள்: கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே போர் நடைபெற்றது. அப்போது அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டிய பழைய கார்சா, நுனாங் பகுதிகளில் இரு நாடுகளின் வீரர்களிடையே மிகப்பெரிய அளவில் சண்டை நடைபெற்றது.
பெருந்திரளான சீன வீரர்கள் அதிநவீன ஆயுதங்களுடன் போரிட்ட நிலையில் மிகக் குறைவான இந்திய வீரர்கள், அவர்களை தீரமுடன் எதிர்கொண்டனர். இந்திய வீரர்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில் ஜஸ்வந்த் சிங் ராவத் என்ற வீரர் மட்டும் காயங்களுடன் உயிரோடு இருந்தார்.
அருணாச்சல பிரதேசத்தின் மோன்பா பழங்குடி இனத்தைச் சேர்ந்த சேலா, நூரா ஆகிய இரு இளம்பெண்கள் இந்திய வீரர்களுக்கு உணவுகளை வழங்கி வந்தனர். போரில் ஜஸ்வந்த் சிங்காயமடைந்த நிலையில் ராணுவ பயிற்சி இல்லாத இரு பெண்களும் அவரோடு இணைந்து சீன வீரர்களுக்கு எதிராக வீரத்துடன் களமிறங்கினர்.
ஜஸ்வந்த் அறிவுரைப்படி பல்வேறு பதுங்கு குழிகளில் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் வைக்கப்பட்டன. சேலாவும் நூராவும் ஒவ்வொரு பதுங்கு குழிகளாக மாறி சீன வீரர்களை மிகக் கடுமையாக தாக்கினர். மூவரின் ராணுவ வியூகத்தால் சுமார் 72 மணி நேரத்தில் 300 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இறுதியில் கையெறி குண்டுதாக்குதலில் சேலா உயிரிழந்தார். நூராவை சீன வீரர்கள் சிறை பிடித்தனர். கடைசி கட்டத்தில் ஜஸ்வந்த் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தலையை சீன வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.
மூவரின் நினைவாக அருணாச்சல பிரதேசத்தின் பழைய கார்சா, நுனாங் பகுதிகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. சீன எல்லையை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதி ‘ஜஸ்வந்த் சிங் கர்' என்றும், அதற்கு அடுத்த பகுதி ‘நூரா போஸ்ட்' என்றும், அதற்கு அடுத்த பகுதி ‘சேலா பாஸ்' என்றும் பெயரிடப்பட்டன. தற்போது சேலா பாஸ் பகுதியில் புதிதாக சுரங்கப் பாதை கட்டப்பட்டிருப்பதன் மூலம் சீனாவுக்குபகிரங்கமாக சவால் விடுக்கப் பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT