Published : 09 Mar 2024 08:14 PM
Last Updated : 09 Mar 2024 08:14 PM
புதுடெல்லி: "ஆந்திரப் பிரதேசம் மிகவும் மோசமாக அழிக்கப்பட்டுள்ளது. பாஜகவும் தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றிணைவது நாட்டுக்கும் மாநிலத்துக்குமான வெற்றியின் சூழலாகும்" என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெரும் இலக்கை நோக்கி இயங்கி வரும் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கிறது.
கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, “வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் அதனுடன் இணைந்தே நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மாநில பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி முழுமையாக வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஆந்திரப் பிரதேசம் அழிக்கப்பட்டுள்ளது” என்று ஜெகன் அரசை சாடியுள்ளார்.
இதனிடையே, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவொன்றில், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணின் முடிவினை நான் மனதார வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் கீழ் பாஜக - தெலுங்கு தேசம் - ஜன சேனா கட்சிகள், நாட்டின் வளர்ச்சி மற்றும் ஆந்திரப் பிரதேச மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட உறுதி பூண்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் பாஜக - தெலுங்கு தேசம் கட்சி - ஜனசேனா கட்சி கூட்டாக அறிக்கை வெளியிடும் என்றும், மார்ச் 17ம் தேதி பாஜகவும் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டாக பேரணி நடத்தும் என எதிர்பாக்கப்படுவதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு வரும் ஏப்ரலில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கும் பாஜக மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12.10 நிமிடம் வரை டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன், சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாஜக-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.
தொகுதி பங்கீடு குறித்து இதே கூட்டணி தலைவர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கினர். ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில் ஏற்கனவே 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் தனது தோழமை கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு தெலுங்கு தேசம் வழங்கி விட்டது. மேலும், 3 மக்களவைத் தொகுதிகளை ஜனசேனா கட்சிக்கு, தெலுங்கு தேசயம் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 2014 தேர்தலின் போது, பாஜகவுக்கு, தெலுங்கு தேசம் ஆந்திராவில் 4 எம்பி, மற்றும் 13 எம்.எல்.ஏ தொகுதிகளை ஒதுக்கியது. இதில், 2 எம்பி மற்றும் 4 எம்.எல்.ஏ தொகுதிகளை மட்டுமே பாஜக வென்றது. ஆயினும் தெலுங்கு தேசம் - பாஜக - கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லியில் நடந்த பாஜகவுடனான தொகுதி பங்கீட்டின் போது, பாஜக இம்முறை 7 எம்பி மற்றும் 10 எம்.எல்.ஏ தொகுதிகளை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது கூட்டணியில் ஜனசேனாவும் உள்ளதால், அக்கட்சிக்கு ஏற்கனவே 3 எம்பி மற்றும் 24 எம்.எல்.ஏ தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக கேட்ட தொகுதிகளை ஒதுக்க முடியாமல் உள்ள சூழலை விளக்கி உள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின் போது பாஜக, இறுதியாக 9 சட்டப்பேரவை மற்றும் 5 மக்களவைத் தொகுதிகளை கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் பாஜ - தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சிகளுக்கு இடையை கூட்டணி ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உறுதியாகியுள்ளது. இதனால், ஆந்திராவை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT