Last Updated : 09 Mar, 2024 01:46 PM

1  

Published : 09 Mar 2024 01:46 PM
Last Updated : 09 Mar 2024 01:46 PM

அமேதியில் போட்டியிட அஞ்சுகிறாரா ராகுல்? - பாஜக விமர்சனத்தால் காங்கிரஸுக்கு நெருக்கடி

புதுடெல்லி: அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சுகிறாரா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கடும் விமர்சனத்தால் காங்கிரஸாருக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

பாஜகவை தொடர்ந்து மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. நேற்று வெளியான இந்த பட்டியலில் உள்ள 39 வேட்பாளர்களில் ராகுலின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதன்மூலம் அவரது போட்டி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் உறுதியாகி உள்ளது. ஆனால், பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமேதியில் எந்த வேட்பாளர் பெயரும் இடம்பெறவில்லை.

இதனால், உ.பி காங்கிரஸார் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகிவிட்டனர். ராகுலின் அமேதி போட்டியில் துவக்கம் முதல் கிண்டல் செய்யும் பாஜக, மீண்டும் ஒரு கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.

இது குறித்து பாஜகவின் தேசிய ஐடி பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது முகநூலில், ‘ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடவில்லையா? அச்சமா?’ எனக் குறிப்பிட்டுள்ளார். வைரலாகி வரும் இப்பதிவால், உபி காங்கிரஸார் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.

1980ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.

அமேதி களத்தில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004ல் முதன்முறையாக களம் இறங்கினார்.

அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019ல் ராகுலை தோற்கடித்தார்.

ஆனால், அதே 2019 மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் என இரண்டு ராகுல் போட்டியிட்டிருந்தார். இதில், வயநாடு தொகுதியில் கிடைத்த வெற்றியால் ராகுல் எம்பியானார்.

அப்போது முதல் காங்கிரஸ் முக்கிய முகமான ராகுலை பாஜக அமேதி தோல்வியை வைத்து கிண்டல் செய்து வருகிறது. இந்தவகையில், நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் ராகுல் பெயர் அமேதியில் இல்லாததும் விமர்சனத்திற்கு காரணமானது.

இந்நிலையில், காங்கிரஸின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் 11ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், காங்கிரஸ் உபியில் போட்டியிடும் 17 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பிரியங்கா போட்டி?: இந்த 17 வேட்பாளர் பட்டியலில் ராகுல் போட்டியிடும் இரண்டாவது தொகுதியாக அமேதி இடம்பெறும் என உபி காங்கிரஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரேபரேலியில் காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரான பிரியங்கா பெயரும் காங்கிரஸாரில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x