Published : 09 Mar 2024 10:40 AM
Last Updated : 09 Mar 2024 10:40 AM
தெலங்கானா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேகலயா, நாகலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 39 தொகுதிகளில் போட்டியிடும் மக்களவை தொகுதி வேட்பாளர்களின் முதல் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று வெளியிட்டது.
அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் இதே தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சசிதரூர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
முதல் பட்டியலில் கேரளாவிலிருந்து 16 தொகுதிகள், கர்நாடகாவிலிருந்து 7, சத்தீஸ்கரில் 6, தெலங்கானா 4, மேகாலயா 2, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, லட்சத் தீவு தலா 1 தொகுதிகள் என மொத்தம் 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவிலிருந்து அறிவிக்கப்பட்ட 4 வேட்பாளர்களில் ஒருவர் பெண். அவரது பெயர் பட்னம் சுனிதா மஹிந்தர் ரெட்டி. இவர் செவெல்லா மக்களவை தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பட்னம் மஹிந்தர் ரெட்டியின் மனைவியான இவர், இத்தொகுதியில் பாஜகவின் முன்னாள் எம்பி விஸ்வேஸ்வர் ரெட்டியை எதிர்கொள்கிறார்.
நல்கொண்டா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஜனா ரெட்டியின் மகன் ராகுவீர் ரெட்டி போட்டியிடுகிறார். ஜனா ரெட்டியின் மற்றொரு மகன் ஜெய்வீர் ரெட்டி 2023 தேர்தலில் நாகர்ஜூனா சாகர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஜனா குடும்பத்தில் தற்போது மற்றொரு மகனும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மஹபூபாத் (எஸ்டி) தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொரிகா பல்ராம் நாயக், ஜாஹிராபாத் தொகுதியில் சுரேஷ் குமார் ஷெட்கர் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT