Published : 09 Mar 2024 12:00 PM
Last Updated : 09 Mar 2024 12:00 PM

அதிகாலை பயணம்... - காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி

பிரதமர் மோடி

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை, அவர் காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடி பூங்காவை சுற்றிப் பார்த்தார்.

பின்னர் யானை சவாரி செய்தார். பயணத்தின் போது, பிரதமர் மோடி சில இயற்கை காட்சிகளை கேமராவில் படம் பிடித்தார். மேலும், பூங்காவில் இருக்கும் யானைகளை புகைப்படம் எடுத்தார். அதோடு, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ. 55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

காசிரங்காவில் இருந்து அருணாசல பிரதேசம் செல்லும் பிரதமர், இன்று மதியம் மீண்டும் அசாம் மாநிலம் வருகிறார். அசாம் மாநிலத்தில் 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் பயண திட்டத்தின்படி, சவாரி முடித்து மதியம் 1:30 மணியளவில் ஜோர்ஹாட் திரும்பும் அவர், ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் 'லச்சித் போர்புகானின்' சிலையை திறந்து வைக்கிறார்.

அத்துடன் அருணாச்சல பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை திறப்பு விழாவும் நடைபெறவிருக்கிறது. பின்னர், அவர் போதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதோடு, புதிதாக கட்டப்பட்டுள்ள டின்சுகியா மருத்துவ கல்லூரியை திறந்து வைப்பது, சிவசாகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் திட்டங்களும் அடங்கும்.

மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு இரவு 7 மணிக்கு வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். அடுத்த நாள் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, உத்தரப் பிரதேசத்தில் ரூ.42,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

காசிரங்கா பூங்காவுக்கு சென்ற புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி "இன்று காலை நான் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்தேன். பசுமை போர்வைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமானது கம்பீரமான ஒரு கொம்பு காண்டாமிருகம் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

காசிரங்கா தேசியப் பூங்காவிற்குச் சென்று, அதன் இயற்கைக் காட்சிகளின் இணையற்ற அழகையும், அசாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். காசிரங்கா பூங்கா உங்களை அசாமின் இதயத்துடன் ஆழமாக இணைக்கும் இடமாகும்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x