Published : 09 Mar 2024 08:40 AM
Last Updated : 09 Mar 2024 08:40 AM

மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி மீட்பு

தவ்பால்: மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ராணுவ இளநிலை அதிகாரி கொன்சம் கேடா சிங் மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ராணுவ அதிகாரியை பாதுபாப்புப் படை அதிகாரிகள் மீட்டனர்.

மணிப்பூரில் கடந்தாண்டு மேமாதம் இனக் கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காண, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோன்சம் கேடா சிங் என்ற அந்த அதிகாரி நேற்று காலை 9 மணியளவில் அவரது வீட்டிலிருந்தே கடத்தப்பட்டுள்ளார். இந்தக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கடத்தலை அடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை எண் 102-ல் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் கொன்சம் கேடா சிங் மீட்கப்பட்டார். பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் விரைவாக மீட்கப்பட்டார். தற்போது தவ்பால் மாவட்டத்தில் உள்ள காச்சிங் அருகே வைகோங் காவல் நிலையத்தில் உள்ளார். கடத்தல் சம்பவம் குறித்து மணிப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில், அதிகாரி கோன்சம் கேடா சிங் குடும்பத்துக்கு கடந்த காலங்களில் கடத்தல் மிரட்டல் கிடைத்ததாகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காக கடத்தல் நடைபெற்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இது 4-வது சம்பவம்: கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் என யாரேனும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று நடந்திருப்பது 4-வது சம்பவம். கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இம்பாலில் கூடுதல் எஸ்.பி. ஒருவர் கடத்தப்பட்டார். மைத்தேயி குழுவின் ஆயுதம் தாங்கிய பிரிவினர் அவரைக் கடத்திச் சென்றனர்.

கடந்த நவம்பர் மாதம் இந்திய ராணுவ வீரர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடத்தப்பட்டனர். சூரச்சந்த்பூரில் இருந்து லெய்மாகோங் செல்லும் வழியில் அவர்கள் கடத்தப்பட்டனர். அவர்களில் 4 பேர் கொல்லப்பட்டனர்

அதற்கும் முன்னதாக செப்டம்பர் 2023-ல் அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த செர்டோ தங்தங் கோம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இப்போது இன்று (மார்ச் 8) ஜூனியர் கமிஷன் ஆஃபீசர் பதவியில் உள்ள அதிகாரி கடத்தப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதே சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடந்த பழங்குடியினர் அமைதி பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. வன்முறையில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரை வரவழைத்தது.

அதேநேரத்தில் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாதங்களாக இணைய சேவையும் முடக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டுவிட்டாலும் கூட அங்கே இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இந்நிலையில் ராணுவ, காவல் அதிகாரிகள் கடத்தல் அங்கு தொடர்கதையாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x