Published : 09 Mar 2024 08:02 AM
Last Updated : 09 Mar 2024 08:02 AM

தேர்தல் வாக்குறுதியாக ராகுல் காந்தி 5 உத்தரவாதம்: ப.சிதம்பரம் விவரிப்பு

“ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார்.

இது குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியது: “ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சி பெறுவோரை நியமித்துக் கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது. ‘படித்தவர்கள் தாங்கள் பயிற்சி பெறுவது எனது உரிமை’ என சட்டத்தை மாற்ற உள்ளோம். பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கிடைக்கும்.

தேர்வு வினாத்தாளை கசிய விடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற்று தரப்படும். ஆன்லைனில் ஆர்டர் பெற்று பொருட்களை விநியோகிக்கும் பணிகளில் பல லட்சம் பேர் உள்ளனர்.

அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க சட்டம் கொண்டு வரப்படும். புதிய தொழில் தொடங்குவோருக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க உள்ளோம். அதில் ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி வழங்கப்படும்.

தற்போது வங்கிக் கடன் மேட்டுக்குடி மக்களுக்குத்தான் செல்கிறது. சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. 42 சதவீத பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

தேர்தல் நெருங்கும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் விலையை உயர்த்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

21,000-க்கும் மேற்பட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதை யார் வாங்கினார்கள் என்பது பாரத ஸ்டேட் வங்கிக்கு தெரியும். அந்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்கின்றனர். உண்மையில் அவற்றை வெளியிட 24 மணி நேரமே போதும்.

காங்கிரஸுக்கு இந்த தேர்தல்தான் கடைசி என்று கூறி, அண்ணாமலை போன்று பல பேர் எங்கள் கட்சிக்கு கெடு விதித்துள்ளனர். ஆனால் 139 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருந்து வருகிறது” என்றார் ப.சிதம்பரம்.

தேர்தல் அறிக்கை தயார்: முன்னதாக, ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 4 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் மீண்டும் கூடி கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் தந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, விரைவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிக்கையில் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு - குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் விளைப்பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது பற்றியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றியும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையில்லாத இளைஞர்களுக்கு வங்கியில் நேரடியாக உதவித்தொகை, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர், குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் கிருக லட்சுமித் திட்டம் என பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அளிக்கவுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிருக லட்சுமி திட்டம் கர்நாடகாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்தும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெளியிடும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான அறிவிப்பும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ளதாகத் தெரிகிறது.

தேர்தல் அறிக்கை குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட ஆலோசனைகளை ஒருங்கிணைத்து, இளைஞர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறையை வெளிப்படையானதாக மாற்றுவதற்கான உறுதியான திட்டத்தை காங்கிரஸ் தயாரித்து வருகிறது, விரைவில் நாங்கள் எங்கள் தேர்தல் வாக்குறுதியை உங்கள் முன்வைப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x